Last Updated : 22 May, 2017 07:52 AM

 

Published : 22 May 2017 07:52 AM
Last Updated : 22 May 2017 07:52 AM

செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் செல்போன் செயலி: பள்ளிக் கல்வித் துறையின் முன்னோடித் திட்டம் மேம்படுத்தப்படுமா?

புத்தகப் பாடத்தை எளிமைப்படுத்த பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை மேம்படுத்தி விரிவு படுத்தினால், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரேங்கிங் முறை நீக்கம், பொதுத் தேர்வு முறையிலும், பாடத்திட்டங்களிலும் மாற்றம் என அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி பள்ளிக் கல்வித் துறை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. அதேவேளையில், மாணவர்கள் பாடத்திட்டத்தை புரிந்துகொண்டு படிப்ப தற்கான செயல்வழிக் கற்றல் முறையையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம். அதை தொழில்நுட்பரீதியில் சாத்தியப்படுத்தும் வகையில் 2015-ம் ஆண்டு tnschool live என்ற மொபைல் செயலியை பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி, புத்தகத்தில் இருக்கும் பாடத்தை, நாற்பரிமாண (4டி) பிம்பமாக திரையில் விளக்கிக் காட்டும். பாடம் குறித்த விளக்கம் வீடியோவாகவும் ஒளிபரப்பாகும்.

பாடம் நடத்தும் செயலி

கடினமான பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளவும், செயல்வழிக் கற்றலுக்கான அடித்தளத்தையும் இந்த செயலி ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வளவு பலன்கள் இருந்தும் இதன் பயன்பாடு விரிவுபடுத்தப்படவில்லை. வரும் கல்வியாண்டில் இருந்தாவது, இதன் பயன்பாட்டை விரிவுபடுத்தி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

கோவையைச் சேர்ந்த ஆசிரியர் ராஜேஷ்குமார் கூறும்போது, ‘‘தகவல் உணர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்டது tnschool live செயலி. கணினி, செல்போனில் ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் இயக்க முடியும். உதாரணமாக, உடல் பாகங்கள் பற்றிய பாடத்தில் புத்தகத்தில் இதயத்தின் படம் உள்ளது. அதை அப்படியே சொல்லிக் கொடுத்தால் மேலோட்டமாக மட்டுமே மாணவருக்கு புரியும்.

அதே படத்தை இந்த செயலியில் ஸ்கேன் செய்தால், நாற் பரிமாணக் காட்சியாக திரையில் விரியும். அனிமேஷன் படம் போல இதயத்தின் செயல்பாட்டை அனைத்து கோணத்திலும் பார்க்கலாம். பாகங்களை அறிய முடியும்.

புத்தகத்தோடு இணைந்த தொழில்நுட்ப வழிக் கல்வி என்பதால், நல்ல பயனளிக் கும். வகுப்பறையில் ஏற்படும் சந்தேகங் களுக்கு இந்த செயலி விடை கொடுக்கும். தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகளை ஒளி, ஒலி வடிவில் தனியே சொல்லிக் கொடுக்க வீடியோ இணைப்பும் இருப்பதால் மனப்பாட வழிமுறையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த செயலிவழிக் கல்வியானது, எளிமையான செயல்வழிக் கல்வியாகும். பெற்றோர் துணையுடன் செல்போனிலும், வகுப்பறைகளில் கணினி உதவியுடனும் மாணவர்களுக்கு இந்த செயலி வழிக் கல்வியை வழங்க முடியும்’’ என்றார்.

கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் அறிவியல் ஆசிரியர்களுக்கு இந்த செயலி மூலம் கற்பிப்பது எப்படி என்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல ஒவ்வொரு பள்ளிக்கும் ஆஃப்லைனில் செயலியை இயக்கும் சிடிக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதை பயன்படுத்துவதில்லை.

காரணம், சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ்வழியில் படிக்கும் 10, 12-ம் வகுப்பு அறிவியல் புத்தகங்கள் மட்டுமே இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. அதுவும் 141 படங்கள் மட்டுமே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வரும் கல்வியாண்டு முதல் இந்த செயலிக்கு ஏற்ப புத்தகங்களை அச்சிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல அனைத்து பாடங்களுக்கும் பொருந்தும் வகையில், தமிழ், ஆங்கில வழியில் இந்த செயலியை மேம்படுத்த வேண்டியுள்ளது. செயல்வழிக் கற்றல் திறனை ஊக்குவிக்க இதுபோன்ற முயற்சிகளை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

வகுப்பறையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இந்த செயலி விடை கொடுக்கும். தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகளை ஒளி, ஒலி வடிவில் தனியே சொல்லிக் கொடுக்க வீடியோ இணைப்பும் இருப்பதால் மனப்பாட வழிமுறையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x