Published : 15 Mar 2017 04:08 PM
Last Updated : 15 Mar 2017 04:08 PM

நுகர்வோர் நலன் காக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கை தேவை: வாசன்

நுகர்வோர் நலன் காக்க தமிழக அரசு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1963-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் அகில உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் மார்ச் மாதம் 15-ம் தேதி அகில உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்நாள் மார்ச் 15 உலக நுகர்வோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பொது மக்கள் வாங்கும் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். இதற்கு பொருள்களை தயார் செய்யும் நிறுவனங்கள் தரமான பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். விற்பனைக்கு வருவதற்கு முன்பே தயாரிக்கப்பட்ட பொருள்களை சோதனை செய்ய வேண்டியது அரசின் கடமை.

இருப்பினும் பொருள்களை வாங்கும் நுகர்வோரும் பொருள்கள் தயாரிக்கப்பட்ட தேதி, விலை போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குறை இருப்பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் கொடுக்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்படாவிட்டாலும் நுகர்வோர் வாங்கும் பொருள்கள் காலாவதி ஆகியிருந்தாலோ, தரத்தில் சந்தேகம் இருந்தாலோ நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் 90 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்து தெரிந்து கொள்ள அது சம்பந்தமான புத்தகங்களை படித்தும், இணையதளங்களில் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

அரசுத்துறை, பொதுத்துறை, தனியார் துறை என்று எதுவாக இருந்தாலும் சேவைக்கட்டணம் செலுத்தி சேவையைப் பெறும் நுகர்வோர் பாதிக்கப்பட்டால் நுகர்வோர் குறைதீர்மன்றத்தை அணுகலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் புகாரின் அடிப்படையில், சட்டத்தின் அடிப்படையில் அபராதம் மற்றும் தண்டை பெற்றுத்தர முடியும். மேலும் நுகர்வோர் நலன் காக்க அரசும் நிர்வாகத்துறை, நீதித்துறை மூலம் செயல்பட்டு வருகிறது.

மேலும் அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கும் வகையில் வியாபாரிகள் விற்கும் பொருள்கள் மீது குறை இருப்பின் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆகியோர் நுகர்வோர் நலன் காக்க தொடர்ந்து செயலாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு துணையாக இருப்பதோடு, பொருள்களை உற்பத்தி செய்கின்ற, தயாரிக்கின்ற நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு, ஆய்வு மேற்கொண்டு, தரமான பொருள்கள், சேவைகளை வழங்குவதற்கு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

மேலும் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஒட்டு மொத்த தமிழ் மக்கள் அனைவரும் உலக நுகர்வோர் உரிமைகள் நாளான இன்று மட்டும் இதனை பற்றி சிந்திப்பதோடு மட்டுமல்லாமல் இனி வரும் நாள் தோறும் தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x