Published : 21 Apr 2017 10:32 AM
Last Updated : 21 Apr 2017 10:32 AM

‘தி இந்து’ குழுமம், கோவை புத்தகத் திருவிழா சார்பில் 23-ம் தேதி உலக புத்தக தின கொண்டாட்டம்

‘தி இந்து’ குழுமம் மற்றும் கோவை புத்தகத் திருவிழா-2017 அமைப்பாளர்கள் சார்பில் கோவையில் வரும் 23-ம் தேதி உலக புத்தக தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாசிப்பை நேசிப்பவர்களும், எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் இணைந்து இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுக்கும் ‘தி இந்து’ நாளிதழ், உலக புத்தகத் தினத்தை ‘கோவை புத்தகத் திருவிழா-2017’ அமைப்பாளர்களுடனும், வாசகர்களுடனும் இணைந்து கொண்டாடுகிறது. இதையொட்டி, கோவை ஏ.டி.டி. காலனியில் உள்ள ‘தி இந்து’ அலுவலகத்தில் 23-ம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

படித்ததைப் பகிர்வோம்

வாசகர்கள் தாங்கள் வாசித்து முடித்த புத்தகத்தை மற்றொரு வாசகரிடம் பரிமாறிக்கொண்டு, புதிய புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல, புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு வசதியில்லாத ஏழைகளுக்கு புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கும் திட்டத்தையும் ‘தி இந்து’ முன்னெடுக்கிறது. தாங்கள் வாசித்த புத்தகத்தை, இந்த திட்டத்தில் நன்கொடையாக அளிக்கலாம். நூல்களை அன்பளிப்பாக கொடுப்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பிடித்ததைக் கொண்டாடுவோம்

தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரத்தின் வேடமணிந்து ‘தி இந்து’ அலுவலகத்துக்கு வருகை தரும் வாசகர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாசிப்பைக் கொண்டாடும் எவரும், எந்த நூலின் எந்தக் கதாபாத்திரத்தின் வேடத்தையும் அணிந்து வரலாம். பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

மேலும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்காக ‘கதை சொல்லும் நிகழ்வும்’ நடைபெற உள்ளது. குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கான பரிசுக் கூப்பன்களும் புத்தகங்களுக்கான சேமிப்பு உண்டியலும் வழங்கப்படும். தொடர்ந்து நடைபெறும் விழாவில், எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா சிறப்புரையாற்றுகிறார்.

தள்ளுபடி விற்பனை

உலகப் புத்தகத் தினத்தன்று ‘தி இந்து’ பிரசுர வெளியீடுகள் அனைத்துக்கும் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதுதவிர, பிற நாட்களில் புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கான சிறப்புச் சலுகைக் கூப்பன்களும் வழங்கப்படும்.

நிகழ்ச்சிகளை உடுமலை.காம் ஆன்லைன் புத்தக அங்காடி, பிரஸாண்டீம் டிசைன் நிறுவனம், கோவை ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. விழா தொடர்பான விவரங்களுக்கு 98431 31323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x