Published : 16 Feb 2017 02:55 PM
Last Updated : 16 Feb 2017 02:55 PM

ஜெ. மறைவுக்குப் பின் அதிமுக: மூன்று மாத நிலவர பார்வை

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 21-வது முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்கிறார்.

மேலும், சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவகாசம் வழங்கியிருக்கிறார்.

பின்னணி

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை உள்ளிட்ட துறைகள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து, அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருடன் ஜெயலலிதா அமைச் சரவையில் இருந்த அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பொதுச் செயலாளரான சசிகலா

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது பொதுச் செயலாளராக சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிந்தார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கிடையே கட்சி, ஆட்சி நிர்வாகங்கள் இரண்டும் ஒருவ ரிடமே இருக்க வேண்டும். அதனால், முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர். ஆனால், சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பொங்கலுக்கு முன்னதாக அவர் முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாயின. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானதால் அந்த முயற்சி தள்ளிப்போனது.

கடந்த ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதிக்குள் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், பிப்ரவரி 5-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என திடீரென அறிவிக்கப் பட்டது. எம்எல்ஏக்களுக்கு தொலை பேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக (முதல்வராக) சசிகலா தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் உடனடியாக முதல்வர் பதவியை ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாயின.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி காலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்றனர். அங்கு, சசிகலாவுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிந்ததும் அமைச்சர்கள் அனைவரும் ராயப் பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்த னர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2.10 மணிக்கு வந்தார். 3.10 மணிக்கு சசிகலா வந்தார். அவரை தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு

இதில், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து, சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. கூட்டம் முடிந்ததும் 3.40 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு சசிகலா திரும்பினார்.

சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அந்தக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

ஓபிஎஸ் போர்க்கொடி

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சூழலில், ஆளுநரின் வருகைக்காக காத்திருந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிட தியானம் செய்த பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கினார். தன்னை சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்தனர் என்று குற்றம் சாட்டினார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இதைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுகவில் இரு அணிகள் உருவானது. ஓபிஎஸ்ஸை அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பரிதி இளம்வழுதி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்.பி.மைத்ரேயன், பொன்னையன் ஆகியோர் ஆதரவளித்து வந்தனர்.

ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்கிறார். பொறுமைக்கும் எல்லை உண்டு. அதற்குப் பிறகு எங்களால் செய்ய முடிந்ததைச் செய்வோம் என்று சசிகலா ஆவேசப்பட்டார்.

சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் பிப்.14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டது. சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அவரது முதல்வர் கனவு தகர்ந்தது.

சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவுக்கு பதில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.

டிடிவி தினகரனுக்கு பொறுப்பு

அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார். கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களிலேயே கட்சியின் முக்கியப் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டது. சமீப காலத்தில் அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற ஒரு பொறுப்பு இல்லாதிருந்த நிலையில் தினகரனுக்காக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. சசிகலா சிறை செல்வதால் அவர் சிறையிலிருந்தாலும் கட்சி மீது கட்டுப்பாட்டை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது உறவினருக்கு அவசர அவசரமாக இப்பொறுப்பு வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

மேலும், ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 20 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா நீக்கினார்.

ஆளுநர் வித்யாசாகர் அழைப்பின் பேரில் பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆளுநரிடம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்தனர். அதன்பின் ஆளுநரின் அழைப்புக்காக காத்திருந்தனர்.

சசிகலா சிறையில் அடைப்பு

இந்நிலையில் பிப்ரவரி 15-ம் தேதி மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் நீதிபதி அஸ்வத் நாராயணா முன்பு சரணடைந்தனர். நீதிமன்ற நடைமுறைகள் முடிந்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆளுநர் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிப்.14-ம் தேதி அன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பழனிசாமி. அதன்பிறகும் ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதையடுத்து, 15-ம் தேதி 7.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆளுநரை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் ஆளுநரைச் சந்தித்தனர்.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு சென்றது. இதனையடுத்து கூவத்தூரிலிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலிருந்து செய்திக் குறிப்பு வெளியானது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார். அதேவேளையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுத்திருக்கிறார்.

குழப்பத்துக்கு முடிவு

இதன்மூலம் தமிழக அரசியல் களத்தில் கடந்த 9 நாட்களாக நீடித்துவந்த குழப்பத்துக்கு முடிவு வந்துள்ளது. தமிழக முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொள்கிறார்.

124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கொடுத்திருந்த ஆதரவுக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

21-வது முதல்வர்

சென்னை மாகாணம் 1967-ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1968-ம் ஆண்டு முதல் 2017-ம் வரை அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என ஏழு பேர் முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் 21-வது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x