Published : 22 Dec 2013 11:44 AM
Last Updated : 22 Dec 2013 11:44 AM

முதல்வருடன் புதிய தமிழகம் எம்எல்ஏ சந்திப்பு: தொகுதிப் பிரச்சினைகள் குறித்து பேசியதாக பேட்டி



புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி, முதல்வர் ஜெயலலிதாவை சனிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடம் ஒதுக்கப்பட்டது. கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் ஏ.ராமசாமி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அடுத்த சில மாதங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் பிரிந்தது. பல்வேறு பிரச்சினைகளில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்து வருகிறார். ஆனால் அவரது கட்சி எம்.எல்.ஏ.வான ராமசாமி, அதிமுகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்.

சட்டசபையில் கிருஷ்ணசாமி பலமுறை வெளிநடப்பு செய்தபோது, ராமசாமி வெளியேறவில்லை. கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவர், புதிய தமிழகம் கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் கேட்டால், பதிலளிக்க மறுத்து வந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை ராமசாமி எம்.எல்.ஏ. சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, "தொகுதிப் பிரச்சினைகள் குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்தேன். தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்" என்றார்.

ஏற்கெனவே, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 7 பேர், கட்சித் தலைமைக்கு தெரியாமல் முதல்வரை சந்தித்துப் பேசினர். பின்னர், அவர்கள் சட்டசபையில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல், ராமசாமியும் இனி அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.வாக செயல்படுவார் எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக, கிருஷ்ணசாமியை போனில் தொடர்பு கொண்டபோது, அவர் முக்கிய ஆலோசனையில் இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x