Published : 16 May 2017 08:55 AM
Last Updated : 16 May 2017 08:55 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்டாவில் ஒருவார ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். சாகுபடி கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மே 15 முதல் 21 வரை ஒரு வாரத்துக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத் தில் 4 இடங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பூதலூர் அருகே அய்யனாபுரத்தை அடுத்த விண்ணணூர்பட்டியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணிய ரசன் தலைமையில் திரைப்பட இயக்குநர் மு.கவுதமன், தமிழ்த் தேசிய இயக்க பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகி யோர் தலைமையில் விவசாயி கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பயணிகளை ரயிலை மறித்தனர்.

இதேபோல ஆலக்குடி ரயில் நிலையம், மோத்திரப்பசாவடி, திரு விடைமருதூர் ஆகிய இடங்க ளில் ரயில் மறியல் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை, குடிகாடு, திருவலஞ்சுழி, சுவாமிமலை, பண்டாரவாடை ஆகிய இடங்களில் ரயில் மறியல் முயற்சி நடைபெற்றது. மாவட்டத் தில் பெ.மணியரசன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 297 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட் டத்தால் அனைத்து ரயில்களும் பல மணி நேரம் தாமதமாகச் சென்றன.

விண்ணணூர்பட்டியில் ரயில் மறியலில் பங்கேற்ற பெ.மணியரசன் கூறியபோது, “விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அரசும் வேடிக்கை பார்க்கிறது. இந்தப் போக்கை கைவிட்டு மாநில அரசு, மத்திய அரசை நிர்பந்தம் செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். ஒருவார ரயில் மறியல் போராட்டத்துக்கு பலன் கிடைக்காவிட்டால் இதைவிட தீவிரமான போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

திருவாரூர், நீடாமங்கலத்தில்…

இதேபோல, திருவாரூரில் தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில், நீடாமங்கலத்தில் டாக்டர் பாரதிச்செல்வன், விவசாய சங்க நிர்வாகி அன்பரசன் ஆகியோர் தலைமையில் ரயில் மறியலுக்கு முயன்ற 116 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் ரயில் மறியலுக்கு முயன்ற 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x