Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியிருப்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது மனக்குமுறலை வரும் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியிருப்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது .

1.12.2013 முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசும்; 10.12.2013 முதல் சமையல் எரிவாயு உருளையின் விலையை 3 ரூபாய் 46 காசும்; 20.12.2013 முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 41 காசும்; டீசலுக்கான விநியோகத் தொகையை லிட்டருக்கு 10 காசும்; 1.1.2014 முதல் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையை ரூ.220ம் உயர்த்தி, மக்களை தாங்க முடியாத சுமைக்கு

ஆளாக்கிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, வெள்ளிக்கிழமை (3.1.2014) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தியிருக்கிறது.

இதுவரை நடந்திராத அளவுக்கு, கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமாகும்.

டீசல் விலை உயர்வு என்பது அனைத்து பொருட்களின் விலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதே போன்று பெட்ரோலும் சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இதுதவிர, சரக்கு போக்கு வரத்துச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த இந்த டீசல் விலை உயர்வு வழி வகுக்கும்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, அரசுப் பேருந்துகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.

பஸ் கட்டணம் உயராது

மத்திய அரசு டீசல் விலையை அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பாதிக்கப்படும் என்றாலும், மக்கள் நலன் கருதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்ற திடமான முடிவுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

நான் ஏற்கெனவே பல முறை சுட்டிக் காட்டியபடி பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கையில் உடனடி மாற்றத்தை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x