Published : 05 Oct 2014 10:06 AM
Last Updated : 05 Oct 2014 10:06 AM

கேரளாவைப் போல் தமிழகத்திலும் டீ-ரிசர்வடு கோச் வசதி- பயணிகள் பெரும் எதிர்பார்ப்பு

கேரளாவைப் போல, தமிழகத்திலும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஸிலீப்பர் கிளாசில் கூடுதல் கட்டணத்துடன் பகலில் பயணம் செய்யும் வசதி வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொதுப்பெட்டியில் நெரிசலில் போவதற்குப் பதிலாக, முன்பதிவு கட்டணம் தவிர, ஸ்லீப்பர் கிளாஸ் கட்டணம் செலுத்தி பகலில் பயணம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதே “டீ-ரிசர்வ்டு கோச்” வசதி ஆகும்.

கேரள மாநிலத்தில், எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளில் குறைந்த கட்டணத்தில் பகலில் அமர்ந்துகொண்டு பயணம் செய்யலாம். அதற்கான டிக்கெட், கவுன்ட்டர்களிலே வழங்கப்படுகிறது. இதன்படி எல்லா ரயில்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஸ்லீப்பர் கிளாசில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநில மக்கள் இந்த வசதியை கடந்த 15 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில், சென்னை – மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் சேலம் வரை இரண்டு பெட்டிகள் “டீ-ரிசர்வ்டு கோச்சுகளாக” செல்கின்றன. சென்னையில் காலை 11.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலத்துக்கு மாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து அந்த இரண்டு பெட்டிகள் ரிசர்வ்டு பெட்டிகளாகச் செல்கின்றன. சென்னை கோட்டத்தில் இந்த ரயிலைத் தவிர வேறு எக்ஸ்பிரஸில் இந்த வசதி இல்லை. மதுரை கோட்டத்தில் அண்மையில் தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸில் மட்டும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இதுபோல மற்ற ரயில்களிலும் இந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் பொதுப் பெட்டியில் நெரிசலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி டீ-ரிசர்வ்டு கோச்சில் பயணம் செய்யலாம். இதனால், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயனடைவார்கள்.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கேரளாவில் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படாததால், இந்த சிறப்பு வசதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் “டீரிசர்வ்டு கோச்” வசதி இல்லாத எக்ஸ்பிரஸ்களில், பொதுப்பெட்டி டிக்கெட் எடுத்துக் கொண்டு ஸ்லீப்பர் கிளாசில் ஏறினால், இடம் காலியாக இருந்தால் முன்பதிவு கட்டணம் தவிர ஸ்லீப்பர் கிளாசின் மீதக் கட்டணம் மட்டும் வசூலித்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இடம் காலியாக இல்லாவிட்டால், குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகைக்கு அதிகமாக பயண கட்டணம் இருந்தால், அபராதத் தொகை இருமடங்காக வசூலிக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x