Published : 25 Jan 2017 09:54 AM
Last Updated : 25 Jan 2017 09:54 AM

பெரிய பச்சைக்கிளியை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் குற்றம் வனத்துறை எச்சரிக்கை

பெரிய பச்சைக்கிளியை வீட்டில் வளர்ப்போர் மீதும், விற்போர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெரிய பச்சைக்கிளிகள் (Psittacula eupatria) அதிக அளவில் வாழ்கின்றன. சாதாரண பச்சைக்கிளைகளைப் போலவே இருக்கும் இவைகளின் கழுத்தில் வளைய வடிவில் சிவப்பு நிறமும், இறகில் சிவப்பு நிறமும் இடம்பெற்றிருக்கும். சாதாரண கிளிகளைவிட அளவில் சற்று பெரியதாக இருக்கும். இந்த அறிகுறிகள்தான், சாதாரண கிளிகளில் இருந்து, இவைகளை வேறுபடுத்துகின்றன.

இந்த பெரிய கிளிகள், இந்திய வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம்-1948-ன் படி, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், 4-வது வகை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த கிளிகள் ஜோடி ரூ.2500 வரை விற்பனை செய்யப்படுவ தாகவும், குறிப்பிட்ட எண்களுக்கு தொடர்புகொண்டால், கிளிகள் வழங்கப்படும் என்றும் சமூக வலை தளங்களில் அண்மைக்காலமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வரு கின்றன. இந்திய வன உயிரினச் சட்டப்படி, இந்த பெரிய கிளிகளை விற்பது குற்றம். ஆனால் இது போன்ற விளம்பரங்கள் எந்த கட்டுப் பாடும் இன்றி சமூக வலைதளங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக வனத்துறை யின் வன உயிரினப் பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சமூக வலைதளங்களில் இந்த விளம்பரம் செய்யப்படுவதாக எங்களுக்கும் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நாங்களே போன் செய்து, கிளிகள் வாங்குவதாக கூறி, அழைத்து, சில வியாபாரிகளைக் கைது செய்துள்ளோம். இம்மாதம் மட்டும் 5 பேரை கைது செய் திருக்கிறோம். 200 பெரிய கிளிகளையும் பறிமுதல் செய்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்திருக்கிறோம்.

இந்த கிளிகளை குஞ்சு பருவத்திலிருந்தே வீட்டில் வளர்த்தால், பேசும் திறன் பெறும். மேலும் நம்மிடம் அன்பாகவும் பழகும். அதனால் இந்த கிளிகளைப் பொதுமக்கள் வீடுகளில் வளர்க்க விரும்புகின்றனர். இது காதல் பறவைகளைப் போல ஒன்று என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. இந்த கிளியை வீடுகளில் வளர்த்தாலோ, இனப்பெருக்கம் செய்தாலோ, விற்றாலோ சட்டப்படி குற்றம். அவ்வாறு செய்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் வீடுகளில் பெரிய கிளிகளை வளர்ப்பதை தடுக்க வேண்டும்.

சமூக வலைதள விளம்பரங் களைப் பார்த்து, கிளிகளை வாங்கக் கூடாது. அவ்வாறு ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், சென்னையைச் சேர்ந்தவர்கள் 044-22200335 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x