Published : 20 Jan 2016 08:35 AM
Last Updated : 20 Jan 2016 08:35 AM

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் 13 பேருடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கு வதால் தமிழக காங்கிரஸ் தலைவர் கள் 13 பேருடன் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன் னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ் கோடி ஆதித்தன், பிரபு, முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.கோபிநாத், அகில இந்தியச் செயலாளர்கள் சு.திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், ஜெயக் குமார் ஆகிய 13 பேர் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அட்ட வணை பிப்ரவரி இறுதியில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வரு மான ஜெயலலிதா அறிவித்துள் ளார். 27-ம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை அளிக்கலாம் என பாமக அறிவித்துள்ளது.

தேர்தல் நிதி திரட்டுதல், மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை என திமுக தனது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக ஆகியவை தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸும் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை தொகுதிகளைக் கேட்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட விஷயங்களை விவாதிப்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் 13 பேரை ராகுல் காந்தி இன்று டெல்லிக்கு அழைத்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘திமுகவுடன் கூட்டணி என் பது ஏற்கெனவே முடிவாகிவிட்டது. 25 முதல் 35 தொகுதிகளில் போட்டி யிட காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், திமுகவிடமிருந்து இதற்கு சாதகமான பதில் வரவில்லை. தமாகா பிரிந்துள்ளதை காரணம் காட்டியும், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியுள்ளது எனக் கூறியும் கடைசி நேரத்தில் தொகுதிகளை திமுக குறைத்துவிடும் என்ற அச்சமும் உள்ளது. இது குறித்து ராகுல் காந்தியிடம் தெரிவிப்போம். திமுக தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதையும் தெரிவிப்போம்’’ என்றார்.

இளங்கோவன் மாற்றம் இல்லை

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மாற்றும் திட்டம் இல்லை. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தறிந்து கூட்டணியை முடிவு செய்வோம். காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது’’ என்றார். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இல்லை என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பால் இளங்கோவன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x