Published : 06 Mar 2017 01:43 PM
Last Updated : 06 Mar 2017 01:43 PM

ரூ.5000 இருப்புத் தொகை கட்டாயம் இல்லாவிட்டால் அபராதம்: வங்கி நிபந்தனைகளுக்கு அன்புமணி கண்டனம்

வணிக நெறிகளுக்கு எதிராக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகளை விதித்திருப்பது, குறைந்தபட்ச சேவை வழங்குவதற்குக்கூட அபராதம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனத்துக்குரியது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "பாரத ஸ்டேட் வங்கியும், சில தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு சில சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்து, அதை நிறைவேற்றாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளன.

அவை அறிவித்துள்ள அபராதம் அதிகமாகும். வணிக நெறிகளுக்கு எதிரான இச்செயல் கண்டிக்கத்தக்கது.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகரப் பகுதிகளில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்ற அளவில் இருக்க வேண்டும்; இது குறைந்தால் அதிகபட்சமாக ரூ.100 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

மாதத்திற்கு 3 முறை மட்டும் தான் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. நடப்புக் கணக்கு வைத்திருப்போர் மாதம் 3 முறைக்கு மேல் பணம் செலுத்தினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஏ.டி.எம். சேவையை கூடுதலாக பயன்படுத்தினால் அதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

மற்றொருபுறம், ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளின் கணக்குகளில் மாதம் 4 முறை மட்டுமே பணம் கட்டலாம் என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் ரூ.150 தண்டம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் மின்னணு பணப்பரிமாற்ற முறையை அதிகரிக்கும் நோக்குடன் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படும் போதிலும், அவை முழுமையான உண்மை அல்ல. மாறாக வங்கிகளின் லாபம் குறைந்து, வாராக்கடன்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவற்றில் எது காரணமாக இருந்தாலும் பொது மக்களையும், வணிகர்களையும் கடுமையாக பாதிக்கும் இந்நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வங்கிக்கணக்கில் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் பணம் செலுத்துவதோ, எடுப்பதோ கூடாது என்பது எப்படி சாத்தியமாகும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சிந்தித்து பார்க்க வேண்டும். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிகர்கள் முந்தைய நாள் வணிகம் மூலம் சேர்ந்த பணத்தை அடுத்த நாள் வங்கியில் செலுத்துவார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு வேலை நாளிலும் அவர்கள் வங்கியில் பணம் செலுத்துவது தவிர்க்க முடியாதது. வணிகம் மூலம் சேர்ந்த பணத்தை சேமித்து வைத்து 10 நாட்களுக்கு ஒருமுறை செலுத்துவதோ, பணத்தையே கையாளத் தேவையில்லை எனும் அளவுக்கு மின்னணு பணப்பரிமாற்ற முறையில் வணிகம் செய்வதோ நடைமுறை சாத்தியமில்லை.

ஒருவேளை தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களின் மூலம் பணத்தை செலுத்தலாம் அல்லது எடுக்கலாம் என்றால், அதிலும் மாதத்திற்கு 5 பரிமாற்றங்களுக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கியும், மற்ற தனியார் வங்கிகளும் அறிவித்துள்ள அபராதம் வாடிக்கையாளர்களின் பணத்தை சுரண்டும் செயலாகவே பார்க்கப்படும்.

வங்கிகளின் லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், நிர்வாகச் செலவுகளை குறைத்தல், வாரக்கடன்களை வசூலித்தல் ஆகியவற்றின் மூலமே சாதிக்க வேண்டும். மாறாக அப்பாவி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை சுரண்டி இலாபத்தை அதிகரிக்க நினைப்பது மக்களை முட்டாள்களாக்கும் கேலிக்கூத்தான செயலாகும்.

ஒருவேளை மின்னணு பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிப்பது தான் இதன் நோக்கம் என்றால், குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி, மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மேலும் ஊக்கப்பரிசுகளை வழங்குவதன் மூலமே மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு மக்களை அழைத்து வரமுடியுமே தவிர, அபராதம் விதித்து சாதிக்க முடியாது. நீந்தத் தெரியாதவர்களை வெள்ளத்தில் தள்ளிவிட்டு நீச்சல் கற்றுக்கொடுக்கும் அணுகுமுறைக்கும், இந்த அணுகுமுறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதனால், பாதிப்புகள்தான் ஏற்படுமே தவிர, பயன் எதுவும் கிடைக்காது.

இவற்றுக்கெல்லாம் மேலாக, வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு சேவை செய்யவேண்டியது வங்கிகளின் கடமையாகும். சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு அதிகபட்சமாக 4% மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது.

நடப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. இந்தப் பணத்தைதான் வங்கிகள் அதிகபட்சமாக 15% வரை வட்டிக்குக் கொடுத்து இலாபம் ஈட்டுகின்றன. வங்கிகளின் மூலதனத்தைவிட சேமிப்புக்கணக்கு மற்றும் நடப்புக்கணக்கில் உள்ள தொகை பலமடங்கு அதிகமாகும். வங்கிகள் லாபம் ஈட்ட அடிப்படைக் காரணமாக விளங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதை விட்டுவிட்டு அபராதம் விதித்து தண்டிப்பது நல்ல அணுகுமுறை அல்ல.

அனைத்துப் பரிமாற்றங்களும் வங்கிகள் மூலம் தான் மேற்கொள்ளப்படவேண்டும்; அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வங்கிகள் மூலம் தான் வழங்கப்படும் என்று கூறி, மக்களைக் கட்டாயப்படுத்தி வங்கிக் கணக்குத் தொடங்க வைத்த மத்திய அரசு, இப்போது அவர்களுக்கு குறைந்தபட்ச சேவை வழங்குவதற்குக்கூட அபராதம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது நம்பிக்கை துரோகம் ஆகும்.

மக்களையும், வணிகர்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் அபராதத்தை ரத்து செய்து, ஏற்கெனவே இருந்த நடைமுறையைத் தொடரும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x