Published : 16 Mar 2017 11:35 AM
Last Updated : 16 Mar 2017 11:35 AM

முதல்வர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் முந்தும் தனியார்: அரசு மருத்துவமனைகளை விட ரூ.1,920 கோடி வருவாய் ஈட்டி சாதனை

கடந்த ஒரே ஆண்டில் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.530.89 கோடியை நிதியை பயன்படுத்தி உள்ளன. ஆனால், அரசு மருத்துவமனைகள், ரூ.247.34 கோடி மட்டுமே பயன்படுத்தி உள்ளன.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துக்காப்பீட்டு திட்டத்தில் ஏழை, எளிய நோயாளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைகள் மேற்கொள்ளும் அரசு மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் குழுவினருக்கு, சிகிச்சைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 15 சதவீதம் ஊக்கதொகையாக பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனையின் வளர்ச்சிக்கு நேரடி நிதியாக 25 சதவீதம் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த 5 ஆண்டில் மருத்துவக் காப்பீட்டு நிதி பயன்படுத்திய அரசு மருத்துவமனைகள், மருத்து வமனை மேம்பாட்டிற்காக 25 சதவீதம் நிதியாக வெறும் ரூ.292 கோடியும், மருத்துவகுழுக்களின் ஊக்கத்தொகையாக 15 சதவீதம் நிதியாக வெறும் ரூ. 173 கோடியை மட்டும் பெற்றுள்ளது.

ஆனால் தனியார் மருத்து வமனைகள் பயன்படுத்தி கொண்ட நிதியை போல் அரசு மருத்துவ மனைகள் பயன்படுத்தியிருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவமனை மேம்பாட்டிற்காக ரூ.558 கோடி யும், மருத்துவக்குழுவினர் ஊக்க த்தொகையாக ரூ.334 கோடியும் கிடைத்திருக்கும். இந்த நிதியால் பல அரசு மருத்துவமனைகள் இன்னும் கூடுதல் சிறப்புடன் தனியாருக்கு நிகராக மாறியிருக்கும். ஆனால், தற்போது இந்த வாய்ப்புகள் நிறைவேறாமல் போய்விட்டது.

இந்நிலையில் காப்பீட்டு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு, அதை பயன்படுத்துவதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள், பொது மக்களின் வரிப்பணம் முறையாக மக்களின் சுகாதாரத்திற்கு முழுமையாக சென்ற டைகிறதா போன்ற ஒப்பீடுகளுடன் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற விவரங்களை அடிப்படையாக கொண்டு மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்புடன் இணைந்து சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த தகவல்கள் குறித்து ஆனந்தராஜ் கூறியதாவது:

கடந்த 2009 முதல் ஒவ் வொரு ஆண்டும் தனியார் மருத்து வமனைகள் காப்பீட்டு திட்ட நிதியை பயன்படுத்துவது அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டை காட்டிலும் ரூ.34 கோடிகள் அதிகரித்து முன்எப்பொழுதும் இல்லாத அளவிற்கு காப்பீட்டு திட்ட நிதி பயன்பாடு 2016ம் ஆண்டில் ரூ.500 கோடியை கடந்துள்ளது. அதற்கு நேர் மாறாக அரசு மருத்துவமனைகள் 2015ம் ஆண்டை காட்டிலும் 2016ம் ஆண்டில் ரூ.24 கோடிகள் நிதி பயன்பாடு குறைந்துள்ளது.

குறிப்பாக கடந்த ஒரே ஆண்டில் தனியார் மருத்துவமனைகள் மருத் துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.530.89 கோடியை நிதியை பயன்படுத்தி உள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைகள், ரூ.247.34 கோடி மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளில், காப்பீட்டு திட்டத்தில் தனியார் ரூ.3,092.25 கோடிகளும், அரசு வெறும் ரூ.1,171.79 கோடிகளும் நிதி பயன்படுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைகளைவிட தனியார் ரூ.1920 கோடி நிதியை கூடுதலாக பயன்படுத்தியுள்ளனர். தனியார் பயன்படுத்திக்கொண்ட இந்த ரூ.1920 கோடி அரசு மருத்துவமனைகள் பயன்படுத்தியிருந்தால் இன்று தமிழகத்தில் தனியாருக்கு நிகராக 10க்கும் மேற்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைகளை கட்டியி ருக்கலாம். ஆயிரக்கணக்கான மருத் துவர்கள், செவிலியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை அளித்திருக்கலாம். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதய நோய் சிகிச்சைப்பிரிவை நவீன மயமாக்கியிருக்கலாம் என்றார்.

காப்பீட்டு நிதியை அதிகம் பயன்படுத்த என்ன செய்வது?

 தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளவிலும் தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து, அறுவை சிகிச்சைக்கு தேவையான அதிநவீன மருத்துவ கருவிகள் நிறுவப்பட்டு காப்பீட்டு திட்ட நிதியை முழுமையாக அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவேண்டும்.

 காப்பீட்டு திட்டத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருக்கும் அரசு தாலுகாமருத்துவமனைகளை கண்டறிந்து சிறந்த தரத்துடன் மேம்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநில அளவில் உயர்மட்டக்குழு அமைத்து அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கப்பட வேண்டும்.

 மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை கிராம புறங்களில் வசிக்கும் சாதாரண ஏழை எளிய மக்கள் எளிமையாக தெரிந்துகொண்டு பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பணிகளை அரசு உடனடியாக செய்யவேண்டும்.

 பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ள ஏழைஎளிய மக்கள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டம் அடையாள அட்டை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்யவேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x