Published : 23 Apr 2017 12:54 PM
Last Updated : 23 Apr 2017 12:54 PM

விவசாயிகள் பாதிக்காத வகையில் மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்துக: வாசன்

தமிழக அரசு விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி கலன்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டப்பகுதிகளில் TNEB மூலம் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தை விவசாய நிலங்கள் மீது மிகப்பெரிய EB டவர்லைன் அமைத்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் மின்சாரத்தை சிறு, குறு விவசாய நிலங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்துக் கொண்டு செல்கின்றன.

உதாரணத்திற்கு தப்பக்குண்டுவிலிருந்து அனைக்கடவு வரை, அனைக்கடவுலிருந்து ராசிப்பாளையம் வரை, ராசிப்பாளையத்திலிருந்து பல பாதைகளாக தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாலவாடி வரை என பல பகுதிகளின் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக டவர் லைன்கள் அமைத்து திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலத்தின் அளவு 52 மீட்டர் அகலம். இந்த மின்பாதை செல்லும் 52 மீட்டர் அகல நிலத்தில் எவ்வித விவசாயம் நடைபெறக் கூடாது, கட்டுமானம் கூடாது, அந்நிலத்தில் ஆழ்துளை கிணறும் அமைக்கக் கூடாது. இவ்வாறு கட்டுப்பாட்டோடு செயல்பட்டு வரும் இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாகின்றன. உதாரணத்திற்கு திருப்பூர் ராசிப்பாளையம் முதல் பாலவாடி வரை உள்ள 184 கி.மீ. தூரத்திற்கு மின்பாதை அமைத்திருப்பதால் சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பாழாகின்றன. உயர் அழுத்த மின்சார கோபுரங்களினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த திட்டப்பாதையில் பயிர் செய்ய கட்டுப்பாடு உள்ளது, நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது, விவசாய நிலங்கள் துண்டாடப்படுகின்றது, நிலத்திற்கான வழி உரிமையில் மோசடி நடைபெறுகிறது போன்ற பல்வேறு காரணங்களால் மின்பாதைகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு - மின்பாதைகள் அமைத்து மின் கோபுரங்கள் வழியாக மின்சாரத்தை எடுத்துச்செல்வதற்காக பதிலாக சாலை ஓரமாக கேபிள்கள் பதித்து மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

மேலும் மின்கடவுத் திட்டங்களுக்காக விவசாயிகளிடம் நிலம் வாங்கும் போது அவர்களிடம் முழு ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே, அவர்களின் நிலத்திற்கு சட்டப்படி, நியாயமான, உரிய இழப்பீடு கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு மின் கடவுத்திட்டத்தையும் தொடங்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தினை அனுமதித்திடக் கூடாது. முக்கியமாக இத்திட்டத்தால் பாதிப்பிற்குள்ளாகும் நில உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியினை இழப்பீடாக நிர்ணயம் செய்து அதனை தனியாக அறிவிக்க வேண்டும். மேலும் கிணறு, ஆழ்துளை கிணறு, வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் இருக்கும் பகுதிகளை உறுதியாக தவிர்த்து மின்கடவு திட்டப்பாதைகளை வகுத்திட வேண்டும்.

ஏற்கெனவே நகரங்களில் மின்கடவு திட்டத்திற்கு மின்சார கேபிள் பயன்படுத்தப்படுவதால் அதனையே கிராமப்புறப் பகுதிகளிலும் செயல்படுத்திட சாலையோர பசுமை வழித்திட்டங்களை பயன்படுத்திட வேண்டும். எனவே தமிழக அரசு தமிழகத்தில் விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக தமிழக அரசு அவர்களின் ஒருங்கிணைந்த கருத்தை கேட்டறிந்த பிறகு, அவர்களின் முழு சம்மதம் கிடைத்தால் மட்டுமே அதற்கேற்றவாறு மின்கடவுத் திட்டத்தை எப்பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்து, நிறைவேற்ற வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x