Published : 26 Jun 2016 12:52 PM
Last Updated : 26 Jun 2016 12:52 PM

ஓசூர் தலைமைக் காவலர் கொலை வழக்கு: தேடப்பட்ட கொள்ளையர்கள் 2 பேர் சரண்

ஓசூர் தலைமைக் காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள் 2 பேர் போலீஸில் சரண் அடைந்தனர். அவர்களில் ஒருவர், என்கவுன்ட்டருக்கு பயந்து விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் கடந்த 15-ம் தேதி பள்ளி ஆசிரியை பார்வதி என்பவரிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த நகை பறிப்பு கொள்ளையர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். ஓசூர் வந்த அந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக சென்ற ஓசூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால் ஆகியோரை கொள்ளைக் கும்பல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த தலைமைக் காவலர் முனுசாமி உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் பெங்க ளூரு கே.ஆர்.புரா அருகே உள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி (எ) புஜ்ஜி (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், உடல்நலக்குறைவால் 16-ம் தேதி அதிகாலை மூர்த்தி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, இச்சம்ப வத்தில் தொடர்புடைய மூர்த்தியின் கூட்டாளிகளான முஜ்ஜாமில் (19), விக்னேஷ் (எ) விக்கி (19), அமரா ஆகியோரை தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த 23-ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த முஜ்ஜாமில், விக்னேஷ் ஆகியோர் போலீஸாரை கண்டதும், அங்கிருந்து தப்பினர். கர்நாடாக மாநிலம் கோலார் மாவட் டம் மூல்பாகலு அருகே நங்கிலி என்கிற ஊரில் நேற்று முன்தினம் அமரா போலீஸாரிடம் சிக்கினார். அமராவிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முஜ்ஜாமில், விக்னேஷ் ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஓசூர் ஏஎஸ்பி அலுவலகத்துக்கு வந்து சரண் அடையப்போவதாக தெரிவித்த னர். அதற்குள் அங்கிருந்த போலீ ஸார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அப்போது, ஏற் கெனவே விஷம் குடித்திருந்த முஜ்ஜாமில் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்த போலீஸார், முஜ்ஜாமிலை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விக்னேஷிடம் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் தலைமைக் காவலர் கொலை வழக்கில் பிடிபட்டுள்ள 3 பேரிடமும் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீ ஸாரின் என்கவுன்ட்டருக்கு பயந்து தான் முஜ்ஜாமில் தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x