Last Updated : 07 Jun, 2017 10:41 AM

 

Published : 07 Jun 2017 10:41 AM
Last Updated : 07 Jun 2017 10:41 AM

மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிய பாடப்பிரிவு: ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களால் அரசுப் பள்ளியில் உயிர்பெறும் கல்வி

மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளைப் போல பாவிக்கும் ஆசிரியர்களாலேயே அரசுப் பள்ளிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. கோவை சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இதற்கு ஓர் உதாரணம். சிறப்பாக படித்து தேறிய மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிதாக ஒரு பாடப்பிரிவை கொண்டு வர பள்ளி ஆசிரியர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டால் அந்த ஒரு மாணவி மட்டுமல்ல, பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது நிதர்சனம்.

கோவை சீரநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. வீடுகளுக்கு நாளிதழ் விநியோகிக்கும் வேலை பார்க்கிறார். மனைவி புவனேஸ்வரி. இத்தம்பதியின் மகள் ப்ரீத்தி. உடல்வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளியான இச்சிறுமிக்கு அவரது தாயாரே துணையாக இருக்கிறார். ப்ரீத்தி சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடம் பிடித்தார். பெற்றோருக்கு மட்டுமல்ல, பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவருக்குமே செல்லப் பிள்ளை ப்ரீத்தி. அனைவரது ஊக்கத்தினாலேயே பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

ஆனால் அதே பள்ளியில் தனது மேல்நிலை படிப்பைத் தொடர நினைக்கும்போதுதான் சிக்கல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளி என்பதால் அறிவியல் பாடப்பிரிவு கிடைக்கவில்லை. எளிதில் கிடைக்கும் கணிதவியல் பாடப்பிரிவு அப்பள்ளியிலேயே இல்லை. வேறு எங்கும் சென்று படிக்க ஒத்துழைக்காத உடல்நிலை. இப்படி பல சிக்கல்கள் இருந்தாலும், அன்போடு தன்னை அரவணைத்து சொல்லித்தரும் அரசுப் பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பை தொடர ஆசைப்பட்டார் அந்த மாற்றுத்திறனாளி மாணவி.

பள்ளி நிர்வாகத்திடமும், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் தாயார் உதவியோடு சென்று தனது நிலையை தெரிவித்தார். அத்துடன் சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனக்கும், தன்னைப் போன்ற மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் 3-வது பாடப்பிரிவை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். அதை பரிசீலித்த கல்வித்துறையினர், உடனடியாக அப்பள்ளியில் கணிதவியில் 3-வது பாடப் பிரிவை தொடங்க பரிந்துரைத்துள்ளனர்.

மாணவிக்கு உதவத் தயாராக இருந்த பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த உடனேயே அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டனர். ஒரு மாற்றுத்திறனாளி மாணவியின் நலனுக்காக தொடங்கப்படும் பாடப்பிரிவு, எதிர்காலத்தில் பல ஏழை, எளிய மாணவர்களுக்கும் கல்வியறிவை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தாய்க்கு நிகர்

மாணவி ப்ரீத்தியிடம் கேட்டபோது, ‘என்னால் நடக்கவோ, வேலைகளைச் செய்யவோ முடியாது. அம்மாவின் துணை தேவை. 10 வருடங்களாக அம்மாதான் என்னை பள்ளிக்குத் தூக்கிச் செல்வார்கள். தாய்க்கு நிகராக என்னை ஆசிரியர்கள் கவனித்துக் கொள்வார்கள். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கொடுத்த ஊக்கமே என்னை படிக்க வைத்தது; நல்ல மதிப்பெண் பெற வைத்தது. மேல்நிலைக் கல்வியையும் இங்கு படித்தால் நிச்சயம் சாதிப்பேன். இதே பள்ளியில் 3-வது பாடப்பிரிவு தொடங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டப்படிப்பை முடித்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறேன். எனக்கு உதவிய பள்ளிக்கு எதிர்காலத்தில் நான் உதவ வேண்டும்’ என்றார்.

‘ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என் மகளை, தங்கள் குழந்தையைப் போல பார்த்துக் கொள்வார்கள். அந்த அரவணைப்புதான் அவளை ஊக்கப்படுத்தி சாதிக்க வைத்தது. வேறு எங்கும் அவளால் படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு பாடப்பிரிவு தொடங்க முடிவு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிறுமியின் தாயார் புவனேஸ்வரி.

நிதி திரட்ட முடிவு

பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘2011 வரை இங்கு 3-வது பாடப்பிரிவு இருந்தது. பின்னர் அது சுயநிதி பாடப்பிரிவாக மாறியதால் அரசு மூலமாக ஆசிரியர்கள் நியமனம் கிடைக்கவில்லை. பள்ளியில் நன்றாக படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தியால் செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாது என்பதால் அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர முடியவில்லை. 3-வது பாடப்பிரிவில் தான் சேரமுடியும் என்ற சூழல் ஏற்பட்டது. எனவே பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் உதவியுடம் நிதி திரட்டி ஆசிரியர்களை நியமித்து 3-வது பாடப்பிரிவை தொடங்க முடிவு செய்துள்ளோம். ப்ரீத்தி மட்டுமல்ல பல மாணவர்களுக்கு இது பயன்படும்’ என்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் வி.சரவணனிடம் கேட்டபோது, ‘3-வது பாடப்பிரிவுக்கு பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு 2 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2 ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் நிதி தேவை. இதற்கு எங்கள் முன்னாள் மாணவர்கள் நிச்சயம் உதவுவார்கள்.

முன்னாள் மாணவர்கள் இந்த பள்ளியை பல வழிகளில் முன்னேற்றியுள்ளனர். அவர்கள் முயற்சியால் தான் கனடா தமிழ்சங்கத்தில் எங்கள் பள்ளி பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x