Published : 24 Jan 2017 11:08 AM
Last Updated : 24 Jan 2017 11:08 AM

மத்திய குழுவின் வருகை உரிய நிவாரணம் பெற்றுத்தருமா?- டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. சம்பா சாகுபடியும் மகசூல் இழப்பைச் சந்தித்து வருகிறது.

இவ்வாண்டு வழக்கம்போல கர்நாடகமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தண்ணீர் தரவில்லை. விவசாயிகள் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பருவமழையும் பொய்த்துவிட்டது. இதனால் டெல்டாவில் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள சுமார் 9 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான விளைநிலங்களில் சம்பா சாகுபடி முற்றிலும் நடைபெறவில்லை.

நேரடி தெளிப்பில் ஈடுபட்ட விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் தங்களுடைய வயலில் சம்பா பயிர் கருகியதை பார்த்து மனமுடைந்து அதிர்ச்சி மற்றும் தற்கொலை மரணங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். மோட்டார் பம்ப் செட்டை பயன்படுத்தி சம்பா சாகுபடி ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பம்ப் செட் விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பளவையும் நடப்பாண்டில் குறைத்துவிடடது.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. அன்றாட பயன்பாட்டுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் பெரும் இன்னல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் வரும் கோடைகாலத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வறட்சிப் பகுதிகளில் மத்திய வேளாண் அமைச்சக இணைச் செயலாளர் தலைமையிலான குழு, தமிழகத்தில் 4 தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து நாளை (ஜன.25) வரை பார்வையிடவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தைத் தாக்கிய வார்தா புயல் பாதிப்புக்கு ரூ.39,865 கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்தும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை இதுவரை மத்திய அரசு செய்யவில்லை. அதேநேரத்தில் கர்நாடகத்துக்கு சுமார் ரூ.1,800 கோடியையும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வறட்சி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்ய உள்ளது.

இன்று(ஜன.24) காவிரி டெல்டாவில் ஆய்வு செய்ய உள்ள மத்திய அரசின் வறட்சி ஆய்வுக்குழு காவிரி டெல்டாவில் நிலவுகின்ற வறட்சியை சமாளிப்பதற்குரிய திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடுகளை விரைவாகப் பெற்றுத்தருமா, நீர்நிலைகளை சீரமைத்து பாசன கட்டுமானங்களை முழுமையாக சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரிஷியூர் சோம.தமிழார்வன் கூறியபோது, “வறட்சியைப் பார்வையிட வரும் ஆய்வுக்குழு, காவிரி டெல்டாவில் ஓடுகின்ற அனைத்து ஆறுகளையும் தலைப்பு முதல் கடைமடை வரை தூர் வாருவதற்குரிய திட்டங்கள் உடனடியாக தேவை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தி, அதற்கான நிதி ஒதுக்கீடுகளை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும். மேலும், வறட்சி பாதிப்பால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கும், சாகுபடி செய்து கருகிப்போன பயிர்களுக்கும் உரிய நிவாரணத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்றார்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ஆர்.ஞானமோகன் கூறியபோது, “காவிரி டெல்டாவில் உள்ள சுமார் 3 லட்சம் விவசாய தொழிலாளர்கள், வறட்சி பாதிப்பால் கடந்த 8 மாதங்களாக வேலையிழந்துள்ளனர். எனவே, விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x