Last Updated : 21 Mar, 2014 12:00 AM

 

Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM

வேட்பாளர்கள் கவனத்தை ஈர்க்கும் மக்கள் மேடை: சென்னையில் தேவை இயக்கம் ஏற்பாடு

தேர்தல் சமயங்களில் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யவைப்பது வாடிக்கையான விஷயம். ஆனால், சென்னையில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை சொல்லி புலம்புவதற்காக மக்கள் மேடை அமைக்க ஏற்பாடு செய்கிறது ’தேவை’ என்ற இயக்கம்.

தேர்தல் வந்துவிட்டால் கட்சிகளும் வேட்பாளர்களும் நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம். சுழற்சங்கம், அரிமா சங்கம் போன்ற அமைப்புகள் வேட்பாளர்களுக்கு பொதுமேடை அமைத்துக் கொடுத்து பேச வைப்பார்கள். மேடைக்கு வரும் வேட்பாளர்களோ, வாய்ப்பளித்தால் மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் என்பதுபோல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். வாக்குறுதிகளைப் பற்றி வென்றவரும் கவலைப் படுவதில்லை, ஓட்டுப் போட்டவர்களும் கேள்வி கேட்கமுடிவதில்லை.

இந்நிலையில், இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வேட்பாளர் மேடைக்கு பதிலாக, மக்கள் மேடை அமைக்கிறது ’தேவை’ அமைப்பு. இதன்படி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து தலா ஒருவர் வீதம் தேர்வு செய்து, தொகுதி பிரச்சினைகள் குறித்து அவர்களை பேச வைக்க திட்டமிடுகிறது ‘தேவை அமைப்பு. இந்த மேடைகளில் சேவை அமைப்புகளையும் பேசவைக்கப் போகிறார்களாம்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் ’தேவை’ அமைப்பின் நிர்வாகி இளங்கோ கூறியதாவது: வேட்பாளர்களிடம் மக்கள் தங்களது பொதுப் பிரச்சினைகளை தெரிவிக்க புதிய முயற்சியாக ’மக்கள் மேடையை அமைக்கிறோம். வெகுஜனத்தைப் பாதிக்கும் விஷயங்களை வேட்பாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல இம்மேடையே வாக்காளர்கள் ஒரு களமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதன்முதலாக வடசென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் மக்கள் மடை அமைக்க போலீஸில் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்ததும் விரைவில் மேடை அமைக்கப்படும். யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ’நோட்டா’ பட்டனை அழுத்தலாம் என்ற தகவல் அடித்தட்டு மக்களை முழுமையாகச் சென்றடைய வில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மேடையைப் பயன்படுத்த இருக்கிறோம். என்றார் இளங்கோ.

தேவைகளை உறுதி செய்வோம்.. தேர்தல் முடிவை இறுதி செய்வோம்! என்ற முழக்கத்துடன் ’மக்கள் மேடை’க்கு அழைப்பு விடுத்து சென்னையின் பல பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு 9791097389 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x