Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

ஒரே நாளில் 2.40 லட்சம் சப்பாத்திகள் விற்பனை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னையில் உள்ள 203 அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே 2 லட்சத்து 40 ஆயிரத்து 795 சப்பாத்திகள் விற்பனையாகியுள்ளன.

ஏழை எளிய மக்களுக்காக சென்னையில் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களில் காலை, மதிய வேளைகளில் இட்லி, பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை, கருவேப்பிலை சாதங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

சென்னை அம்மா உணவகங்களில் மாலை வேளையில் 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கு விற்கப்படும் என கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சென்னையில் ஏற்கெனவே உள்ள 201 அம்மா உணவகங்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் உள்பட 203 அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளே அம்மா உணவகங்களில் பொதுமக்கள் குவிந்து, சப்பாத்திகளை விரும்பி சாப்பிட்டனர். ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் சராசரியாக ஆயிரம் முதல் 1,200 சப்பாத்திகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவை விற்றுத் தீர்ந்தன.

சென்னை முழுவதும் உள்ள 203 அம்மா உணவகங்களிலும் வெள்ளிக்கிழமை மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரத்து 795 சப்பாத்திகள் விற்பனையானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x