Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM

கொளத்தூர் மணி உள்பட 4 பேர் ஜாமீனில் விடுதலை: தே.பா. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கொளத்தூர் மணி உள்பட நான்கு பேர் சனிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

சேலம் காந்திரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் இயங்கிவருகிறது. கடந்த நவ., 1ம் தேதி வருமானவரி அலுவலகத்துக்குள் மர்ம நபர்கள் சாக்குப்பையில் தீயை கொளுத்திப் போட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, நங்கவள்ளி அருண்குமார், கிருஷ்ணன், சீலநாயக்கன்பட்டி அம்பிகாபதி ஆகிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின், இவர்கள் நான்கு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுதலை செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து, சேலம் நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த மணி உள்ளிட்டவர்களை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் கொளத்தூர் மணி நிருபர்களிடம் கூறியதாவது:

தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒரு கருப்புச் சட்டம். இந்த சட்டத்தை ஐபிஎஸ் படித்த அதிகாரிகள் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. சென்னையில் உள்ள ஆலோசனை குழுமத்தில் உள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளும், இந்த சட்டம் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆராயவில்லை.

உயர் நீதிமன்றத்தில் உள்ள இளம் நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x