Published : 08 Jun 2017 08:21 AM
Last Updated : 08 Jun 2017 08:21 AM

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்துகள் குறித்து ஜிஐஎஸ் வரைபடம் தயாரிப்பு பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து வரி செலுத்தும் சொத்துகள் மற்றும் அரசு வழங்கும் சேவைகள் குறித்து புவிசார் தொழில்நுட்பத்தின் (ஜிஐஎஸ்) மூலம் வரைபடம் தயாரிக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் நேற்று தொடங்கியது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியில் புவிசார் தகவல் தொழில்நுட்ப (ஜிஐஎஸ்) உதவியுடன் கட்டிடங்களின் (குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள்) அமைவிடம் மற்றும் அப்பகுதியில் அரசால் வழங்கப்பட்ட பொது சேவைகள் (தெரு விளக்குகள், சாலைகள், பூங்காக்கள், மழைநீர் வடிகால்கள்) ஆகியவை வரைபடமாக தொடுக்கப்பட உள்ளன.

இந்த வரைபடம், சென்னை மாநகராட்சி மற்றும் சேவைத் துறை களான குடிநீர் வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்டவை வழங்கும் சேவை களை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

ஜிஐஎஸ் முறையில் தகவல் சேகரிக்க, தலா 2 பேர் கொண்ட 15 குழுவினர், ஒவ்வொரு வார்டிலும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு வரும் பணியாளர்கள், சென்னை மாநகராட்சியின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மாநகராட்சி முத்திரை பதித்த தொப்பி, ஒளிரும் ஆடை ஆகியவற்றை அணிந்துகொண்டு பணியில் ஈடுபடுவர்.

3 வார்டுகளில் தொடக்கம்

முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் 57-வது வார்டு, கோடம்பாக்கம் மண்டலத்தில் 136-வது வார்டு, அடையாறு மண்டலத்தில் 172-வது வார்டு ஆகிய பகுதிகளில் வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 12 லட்சத்து 2 ஆயிரத்து 834 சொத்து வரி மதிப்பீடுகளில், தற்போது, 57-வது வார்டில் 8 ஆயிரத்து 747 சொத்துகளும், 136-வது வார்டில் 10 ஆயிரத்து 414 சொத்துகளும், 172-வது வார்டில் 6 ஆயிரத்து 76 சொத்துகளும் உள்ளன. வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்கள் அளவீடு மேற்கொள்ளவும், அவர்கள் கோரும் விவரங்களை அளிக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x