Published : 10 Apr 2016 07:48 PM
Last Updated : 10 Apr 2016 07:48 PM

திமுக தேர்தல் அறிக்கை 2016 - முக்கிய அம்சங்கள்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,500 வழங்கப்படும். சிறு, குறு விவசாயக் கடன், மாணவர் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

பூரண மதுவிலக்கு

* தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) கலைக்கப்பட்டு, அதன்மூலம் செயல்பட்டு வரும் மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்.

* தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனை வாரியம் புதிதாக உருவாக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த புதிய வாரியத்தில் பணி வழங்கப்படும். மாவட்டந்தோறும் மது மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்

* விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை.

* வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும்.

* சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

* நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 வரை உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.

* இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு உருவாக்கப்படும்.

* நம்மாழ்வார் பெயரில், இயற்கை வேளாண் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

* மன்னவனூரில் 390 ஏக்கரில் மண்டல தோட்டக்கலை ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.

* விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும்.

100 நாள் வேலை திட்ட நாட்கள் அதிகரிப்பு

* சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசு ரூ.500 ரொக்கமாக வழங்கப்படும்.

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்க சட்டம் இயற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதுடன், கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து மொத்தம் 150 நாட்களுக்கு வேலை வழங்கக் கூடிய வகையில், புதிய சட்டம் உருவாக்கப்படும். புதிய மாநிலச் சட்டத்தின் அடிப்படையில், பயிர்க் காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய வேலைகளுக்கே பயன்படுத்தப்படுவார்கள்.

* சிறு, குறு விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்கும்போது ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

லோக் ஆயுக்தா

* முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, லோக் ஆயுக்தா சட்ட அமைப்பு உருவாக்கப்படும்.

* பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும்.

* நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், நாட்டுச் சர்க்கரை விற்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கரில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம், நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும்.

* நீர்நிலைகளை சீரமைக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரூ.2 ஆயிரம் கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

* சென்னை பெருநகர் வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

மீனவர்களுக்கு வீடுகள்

* மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

* மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தப்படும்.

* மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும்.

நெசவாளர்களுக்கு...

* காஞ்சியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும்.

* நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்.

* ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும்.

* நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

* கைத்தறி நெசவாளர்களுக்கு 200, விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

* சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்.

* உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இணையதள வசதி

* புதிய கல்வி கவுன்சில் ஏற்படுத்தப்படும்.

* கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து மாணவர்களுக்கும் இணையதள வசதி.

* சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் மானியம்.

* 54 ஆயிரத்து 233 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.

* முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை.

* தொழில் தொடங்க 100 நாட்களில் அனுமதி.

* மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

அண்ணா உணவகம்

* ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் 3 எல்இடி பல்புகள்.

* அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுமுறை 9 மாதங்களாக உயர்வு.

* கருவில் இருக்கும் குழந்தைக்கும் காப்பீடு.

* திருமண உதவித்தொகை ரூ.60 ஆயிரமாக உயர்வு.

* 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

* பேறுகால உதவி ரூ.18 ஆயிரமாக உயர்வு.

* ஏழைகளுக்கு உணவு வழங்க அறிஞர் அண்ணா உணவகம்.

* தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை ஏற்படுத்தப்படும்.

* ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

* திருவாரூர், நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

* வசதியற்றவர்களுக்கு அரசு செலவில் கைபேசிகள் வழங்கப்படும்.

* பொது இடங்கள் அனைத்திலும் வை-பை வசதிகள் செய்து தரப்படும்.

* உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்ற கோவை மாநகரில் சென்னையில் உள்ளது போல் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்காக..

* இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும்,

நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

* இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், “பொது வாக்கெடுப்பு” நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

சேவை உரிமைச் சட்டம்

* பொது மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச்

சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோகத் திட்டங்கள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் ஆகியவை முறையாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்றப்படும்.

கச்சத்தீவு...

* கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால் தமிழக மீனவர்களை பாதுகாத்திட, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திருமண உதவித்தொகை

* ஏழை விதவைப் பெண்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

* பட்டப்படிப்பு படித்த அல்லது பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்குத் திருமண உதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும்

50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

* கையால் மலம் அள்ளும் வழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படும்.

* வேலையில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக,உயர்த்தப்படும்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்

* கந்து வட்டிக் கொடுமையிலிருந்து ஏழை எளியோரைக் காப்பாற்ற சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும், தலைச்சுமைகளிலும்

காய்கறிகள், மீன் விற்பவர்கள், பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள், தேநீர் விற்பவர்கள், பழரசம் விற்பவர்கள், இளநீர் விற்பவர்கள், பஞ்சர் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு வாரத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் வகையில் வட்டியில்லாக் கடன் 2000 ரூபாய் வரையில் எளிய முறையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

* முதியோர் உதவித் தொகை 1300 ரூபாயாக உயர்வு. முதியோருக்குக் கட்டணமில்லாப் பயணச் சலுகை.

* ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற நடவடிக்கை.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x