Published : 24 Sep 2016 02:47 PM
Last Updated : 24 Sep 2016 02:47 PM

கொடைக்கானல் நகராட்சி தலைவர் பதவி: அதிமுக, திமுகவில் களம் காண தயாராகும் தலைகள்

கொடைக்கானல் நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற அதிமுக, திமுகவில் தலா இருவர் களம் இறங்கத் தயாராகிவிட்டனர். இதில் 3 பேர் நகராட்சித் தலைவர் பதவியில் இருந்தவர்கள்.

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தலம் கொடைக்கானல். இதனால் வருமானம் அதிகமுள்ள நகராட்சியாக விளங்குகிறது.

இந்த நகராட்சியைக் கைப்பற்ற அதிமுக, திமுக பிரமுகர்கள் இப்போதே களம் இறங்கத் தயாராகிவிட்டனர்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் கோவிந்தன் நகராட்சி தலைவராகப் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். இவரை கட்சித் தலைமை பதவியில் இருந்து திடீரென நீக்கம் செய்தது. இதையடுத்து துணைத் தலைவர் எட்வர்டு நகராட்சித் தலைவராக ஓராண்டுக்கு மேல் பொறுப்பு வகித்தார். அடுத்து நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் வெற்றி பெற்று நகராட்சித் தலைவரானார்.

தற்போது ஸ்ரீதரன் தலைவர் பதவிக்கு குறிவைத்து மீண்டும் களம் இறங்க உள்ளார்.

கடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த துணைத் தலைவர் எட்வர்டு இந்த முறை தனக்கு தலைவர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர் போட்டியிட்ட 19-வது வார்டில் களம் இறங்க உள்ளார்.

கவுன்சிலர் பதவிக்கு ஸ்ரீதரன் முதல் முறையாகப் போட்டியிட உள்ளதால் தனக்கான வார்டை தேர்வு செய்து வருகிறார். இவர் 6-வது வார்டில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என்று கட்சியினர் கூறுகின்றனர்.

அதிமுகவைப் பொறுத்தவரை இந்த இருவர் தான் நகராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் தற்போது களத்தில் உள்ளனர்.

திமுகவில் முன்னாள் நகராட்சித் தலைவர் முகமது இப்ராகிம் மீண்டும் தலைவர் பதவியை கைப்பற்ற களம் இறங்கியுள்ளார். இவர் கொடைக்கானல் நகர திமுக செயலாளராகவும் உள்ளார்.

திமுகவில் நகராட்சித் தலைவர் போட்டிக்கான களத்தில் உள்ள மற்றொருவர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜீவா. இவர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு முதல் முறையாகப் போட்டியிட உள்ளார்.

அதிமுக, திமுகவில் தலா இருவர் நகராட்சித் தலைவர் பதவியை குறிவைத்து கவுன்சிலர் தேர்தலை சந்திக்க உள்ளனர். கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் போட்டியிட அதிமுக, திமுகவில் பலரும் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.

தலைவர் பதவிக்கான போட் டியில் இவர்கள் மட்டும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்த கட்டமாக கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெறும்போது இரு கட்சி களிலும் மேலும் சில கவுன்சிலர்கள் களம் இறங்கவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x