Published : 10 Jun 2016 12:41 PM
Last Updated : 10 Jun 2016 12:41 PM

பாம்பார் மலையை 30 ஆண்டுகளாக பாதுகாத்த லண்டன் தம்பதிக்கு பசுமை விருது

கொடைக்கானல் பாம்பார் மலையை 30 ஆண்டுகளாக மரங்களை வெட்டாமல் பாதுகாத்து வரும் லண்டன் தம்பதிக்கு பசுமை விருதை செட்டிநாடு பப்ளிக் பள்ளி வழங்கியது.

லண்டனைச் சேர்ந்த ராபர்ட் டீவர்ட்(79), டான்யா பால்கர்(77) ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இங்கு மரங்கள் வெட்டப்பட்டு வனங்கள் அழிவதைக் கண்டு வேதனை அடைந்தனர். அழியும் வனங்களை பாதுகாப்பதற்காக இவர்கள் இங்கேயே தங்கி வட்டக்கானல் வன பாதுகாப்பு மையம் என்ற நிறுவனம் மூலம் கொடைக்கானலில் பாம்பார் மலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டு மரங்களை முறையாகப் பராமரித்து வருகின்றனர்.

இவர்களது சேவையைப் பாராட்டும் வகையில், காரைக்குடி அருகே உள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பசுமை விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விருதை பள்ளியின் டீன் பூர்ணசந்திரன் வழங்கி பேசும்போது, இவர்கள் மரங்களை பாதுகாத்ததோடு மட்டுமில்லாமல் அப்பகுதி மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது சிறப்பான நற்செயலாகும். இவ்விருதை ஆண்டுதோறும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைவோருக்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளி வழங்க உள்ளது என்றார்.

விருது பெற்ற ராபர்ட் டீவன், டான்யா தம்பதியினர் மாணவர்களிடையே பேசும்போது, எங்களின் 30 ஆண்டுகால உழைப்பிற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசே இவ்விருது. குழந்தைகளின் மனதில் ஆழமான விதையை விதைத்தால் மட்டுமே காடுகளைப் பாதுகாக்க முடியும் என்றனர்.

பள்ளி நிறுவனர் குமரேசன் பேசுகையில், குழந்தைகளுக்கு வெறும் படிப்பு மட்டுமல்லாது சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அவசியமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x