Last Updated : 15 Oct, 2014 08:18 AM

 

Published : 15 Oct 2014 08:18 AM
Last Updated : 15 Oct 2014 08:18 AM

எக்ஸ்பிரஸ் ரயில்களில் புது மோசடி: பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை தலையணையாக மாற்றி வாடகைக்கு சப்ளை

எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதுவகையான மோசடி நடக்கிறது. பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை தலையணையாக மாற்றி வாடகைக்கு கொடுத்து காசு பார்க்கின்றனர்.

ரயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு 2 படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, முகம் துடைக்கும் டவல், ஒரு கம்பளி தர வேண்டும் என்பது ரயில்வே விதி. ஆனால், இவற்றை முறையாக வழங்குவதில்லை என்பது பயணிகளின் புகார். ஒரேயொரு படுக்கை விரிப்புதான் தருகின்றனர். முகம் துடைக்கும் டவல் கொடுப்பதேயில்லை. பலருக்கு கம்பளியும் கிடைப்பதில்லை.

இதுகுறித்து அவ்வப்போது பயணிகள் புகார் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். புகார் வரும்போது குறிப்பிட்ட பெட்டியில் மட்டும் குறையை சரிசெய்கின்றனர். அடுத்த பெட்டியில் பழைய நிலையே தொடர்கிறது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

ஏ.சி. பெட்டியில் ஒவ்வொரு வருக்கும் இரண்டு படுக்கை விரிப்புகளுக்கு பதிலாக ஒன்றை மட்டும் கொடுத்துவிட்டு, மற்றொன்றை இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு எடுத்துச் சென்று வாடகைக்கு கொடுக்கின்றனர். இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஒரு படுக்கை விரிப்பும், தலையணையும் ரூ.30 வாடகைக்கு தரப்படுகிறது.

ரயில் பெட்டிகள் மிகவும் அழுக்காக இருப்பதால் பலரும் படுக்கை விரிப்பு வாங்கி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள புது மோசடியில் ஈடுபடுகின்றனர். ரயிலில் ஒருமுறை பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை உடனே சலவைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அப்படி சலவைக்கு அனுப்பாமல், இரண்டு படுக்கை விரிப்புகளை ஒன்றாக மடித்து, அதை தலையணை உறைக்குள் திணிக்கின்றனர். மற்றொரு உறையைப் போட்டு, தலை யணையாக மாற்றி வாடகைக்கு விடுகின்றனர். அதை வாங்கி தலைக்கு வைத்துப் படுக்கும் போது அதிலிருந்து துர்நாற்றம் அடிக்கிறது. அதுபற்றி டிக்கெட் பரிசோதகரிடம் பலர் புகார் கூறுகின்றனர். அவரிடம் உள்ள புகார் புத்தகத்திலும் புகார்கள் குவிகின்றன. இந்த புதுவகை மோசடி குறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

ரயில்வேயில் படுக்கை விரிப்புகள், தலையணைகளை வாடகைக்கு விடும் ஒப்பந்ததாரர்கள் கோட்ட வாரியாக இருக்கின்றனர். ஒவ்வொரு ரயில்வே கோட்டமும் குறிப்பிட்ட ரயில்களை மட்டும் பராமரிக்கும் பணியைச் செய்கின்றன. உதாரணத்துக்கு சென்னை ரயில்வே கோட்டத்தில் குருவாயூர், மன்னை, சிலம்பு, சோழன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், மதுரை கோட்டத்தில் பாண்டியன், பொதிகை உள்ளிட்ட ரயில்களும், சேலம் கோட்டத்தில் கோவை இன்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்களும் பராமரிக்கப் படுகின்றன.

ஏ.சி.பெட்டி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, தலையணை உள்ளிட்டவை வழங்குவதற்கான 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது. தற்போதைய ஒப்பந்ததாரருக்கு 2019 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படுக்கை விரிப்பு, தலையணையின் கூடுதல் தேவை காரணமாக, ஏ.சி. பெட்டிக்கான படுக்கை விரிப்பு, தலையணையை இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு எடுத்துப் போய் வாடகைக்கு விடுகின்றனர். இதனால், இரண்டு படுக்கை விரிப்புக்கு பதிலாக ஒரு படுக்கை விரிப்புதான் கொடுக்கின்றனர்.

பயன்படுத்திய படுக்கை விரிப்புகளையும் துவைக்காமல் கொடுக்கின்றனர் என்று புகார் வந்துள்ளது. புகாரில் சிக்கும் ஒப்பந்ததாரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை தலையணையாக மாற்றி வாடகைக்கு விடுவது பற்றி சென்னை கோட்டத்துக்கு புகார் எதுவும் வரவில்லை. அதுகுறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x