Last Updated : 22 Aug, 2016 04:29 PM

 

Published : 22 Aug 2016 04:29 PM
Last Updated : 22 Aug 2016 04:29 PM

மதுரையில் தொடரும் வழிப்பறி, கொள்ளை: வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல பொதுமக்கள் அச்சம்

மதுரையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மதுரை நகரில் 24 காவல் நிலையங்கள் உள்ளன. ஆயுதப் படை போலீஸார் உட்பட 3 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். குற்றப் பிரிவு துணை ஆணையர், 4 உதவி ஆணையர்கள் மற்றும் நகர் குற்றப்பிரிவில் 6 ஆய்வாளர்கள், திலகர் திடலில் 5 குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், தல்லாகுளம் பிரிவில் 2 குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், அண்ணாநகரில் 3 குற்றப் பிரிவு ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இப்பிரிவுக்கென குறிப்பிட்ட எண்ணிக்கையில் காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 500க்-கும் மேற்பட்ட குற்றப்பிரிவு காவலர்களும் உள்ளனர்.

இருப்பினும் நகரில் சமீபகாலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆக.10-ம் தேதி தனக்கன்குளத்தில் அதிகாலையில் வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு, ஆக. 14-ல் உச்சப்பரம்பு மேட்டில் தனியாக இருந்த மின்வாரிய ஓய்வு அலுவலரின் வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு, ஆக.15-ம் தேதி சின்னசொக்கிகுளத்தில் வழக்கறிஞர் வீட்டின் கதவை உடைத்து 49 பவுன் நகைகள் கொள்ளை, ஆக.16-ம் தேதி டிஎம்.கோர்ட் அருகில் நள்ளிரவில் பெயின்ட் கடையின் கதவை உடைத்து ரூ. 4.65 லட்சம் கொள்ளை, ஆக.17-ம் தேதி இரவில் பருப்பு வியாபாரியைத் தாக்கி ரூ.3.50 லட்சம் வழிப்பறி என தொடர் குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்களால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் அச்சமடைந்துள்ளனர். நகர் விரிவாக்கப் பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்களும் அச்சத்தில் உள்ளனர். திருட்டு பயத்தால், வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுபற்றி வியாபாரிகள் சிலர் கூறியதாவது: அதிக பணப் புழக்க முள்ள வர்த்தக நிறுவனங்களைக் குறி வைத்து, இரவில் கைவரிசை காட்டுகின்றனர். அடிக்கடி மதுரைக்கு வந்து செல்லும் வெளியூர் வியாபாரிகளை நோட்ட மிட்டும் வழிப்பறி செய்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை பகலிலேயே கண்காணித்து, இரவில் கொள்ளை அடிக்கின்றனர்.

கடந்த 8 மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கொள்ளை, சங்கிலி பறிப்பு, திருட்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. திருடர்கள் பெரும்பாலும் அதிவேக இருசக்கர வாகனங்களை பயன் படுத்துகின்றனர். வியாபாரிகள், பெண்கள், பொதுமக்களின் அச்சத்தை போக்க போலீஸாரின் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

இதுபற்றி குற்றப் பிரிவு போலீஸாரிடம் விசாரித்தபோது, பெரும்பாலும் குற்றச் சம்பவங்களில் சிறுவயது இளைஞர்கள் அதிகமாக ஈடுபடுவதை காண முடிகிறது. வெளியூர் நபர்களும் அடிக்கடி மதுரையில் கைவரிசை காட்டுகின்றனர். கல்லூரி விடுதிகளில் படிக்கும் சில வெளியூர் மாணவர்களும், டிகிரி, டிப்ளமோ படித்தவர்களும் திருட்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள் குற்ற வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்படும்போது, அங்கிருக்கும் கைதேர்ந்த குற்றவாளிகளுடன் நெருங்கி பழகி விடுகின்றனர். ஜாமீனில் வெளி வந்தபின், அவர்கள் ஒருங்கிணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நகரில் குற்றப் பிரிவில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால், இப்பிரிவில் விரும்பி பணிபுரிய போலீஸார் தயங்கும் நிலை உள்ளது.

இருப்பினும், குற்ற வழக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்றப் பிரிவில் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x