Last Updated : 16 Mar, 2017 08:20 AM

 

Published : 16 Mar 2017 08:20 AM
Last Updated : 16 Mar 2017 08:20 AM

‘786’ என்ற எண்களில் முடியும் நூறு ரூபாய் நோட்டு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை: ‘இபே’ நிறுவனத்தால் பரபரப்பு

‘786’ என்ற எண்களில் முடியும் நூறு ரூபாய் நோட்டை ‘இபே’ நிறுவனம் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தயாரிப்புப் பொருட்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யலாம். விற்பனை செய்யப்பட்ட தொகைக் கான கமிஷனை மட்டும் ஆன் லைன் வர்த்தக நிறுவனம் எடுத்துக் கொண்டு, மீதித் தொகையை பொருளை விற்றவரிடம் கொடுத்து விடும்.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல நிறுவனங்கள் இப்படியே செயல்படுகின்றன. இதேபோல ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் ‘இபே’ நிறுவனம் மூலம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் ஒரு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் புனித எண்ணாக கருதும் ‘786’ என்ற எண்ணுடன் முடியும் நூறு ரூபாய் நோட்டை விற்பனை செய்வதாக ‘இபே’ நிறுவனம் மூலம் சிலர் அறிவித்துள்ளனர். இந்த நூறு ரூபாய் நோட்டின் விலை ரூ.50 ஆயிரம். தபால் செலவுக்கு கூடுதலாக ரூ.90. மொத்தம் 50 ஆயிரத்து 90 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்துபவர்களுக்கு இரு நாட்களில் அவர்களின் முகவரிக்கு ‘786’ என்று முடியும் நூறு ரூபாய் நோட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று ‘இபே’ நிறுவன இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 50 ரூபாய் நோட்டை ரூ.254-க்கும், 20 ரூபாய் நோட்டை ரூ.294-க்கும், 10 ரூபாய் நோட்டை ரூ.244-க்கும், 5 ரூபாய் நோட்டை ரூ.549-க்கும் விற்பனை செய்ய அதே நிறுவன பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொது மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி, அநியாய விற்பனையை வெளிப் படையாக செய்பவர்களுக்கும், ‘இபே’ நிறுவனத்துக்கும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் முகமது மைதீன் கூறும்போது, “786 என்பது ‘இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்’ என்ற வார்த்தை களின் எண்களுக்கான சுருக்கமா கும். இந்த எண்ணுக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொடர்பு இல்லை. இதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். பொதுமக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி, அதை பணமாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கூறும்போது, “786 என்பது வெறும் எண் மட்டும்தான். இது புனித எண் என்பது தவறானது. இதை வைத்து மக்களிடம் பணம் பறிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x