Published : 28 Jun 2019 09:41 AM
Last Updated : 28 Jun 2019 09:41 AM

4 மாதங்களுக்கு பிறகு நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்; கூட்டம் கூட்டமாக வந்து மனு அளித்த கிராம மக்கள்: காற்றாலை, உரம் விலை, எரிவாயு குழாய் விவகாரங்களால் புயல்

தூத்துக்குடியில் 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், தனியார் காற்றாலை, உரம் விலை உயர்வு, எரிவாயு குழாய் பதித்தல் போன்ற விவகாரங்கள் புயலைக் கிளப்பின. கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மனு அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக 4 மாதங்களுக்குப் பிறகு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.

காற்றாலை விவகாரம்

தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி, மகாராஜன், வீரபாண்டி செல்லச்சாமி மற்றும் கீழப்பூவாணி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளின் இருக்கைகளுக்கு முன்னால் வந்தனர். `ஓடை புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் அனுமதியில்லாமல் மின் கம்பங்களை தனியார் காற்றாலை நிறுவனங்கள் நட்டுள்ளன. இதனை தட்டிக் கேட்டால் மிரட்டுகின்றனர். இந்த மின் கம்பங்களை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது’ என வலியுறுத்தினர்.

பயிர் காப்பீடு திட்டம்

தொடர்ந்து, ஆட்சியர் பேசியதாவது: பயிர் காப்பீடு திட்டத்தில் 2016-2017-ம் ஆண்டில் கூடுதலாக 71 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வரப்பெற்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 78 விவசாயிகளுக்கான ரூ. 11 லட்சம் பணம் கையிருப்பில் உள்ளது. விவசாயிகள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் இழப்பீடு தொகை வழங்கப்படும்.

2017- 2018-ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகை ரூ. 50 கோடி வரவேண்டும். இதில் ரூ. 29.10 கோடி வந்துள்ளது. மீதமுள்ள தொகை ஒரு மாதத்துக்குள் வந்துவிடும்.

2018- 2019-ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகையை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. 2019- 2020-ம் ஆண்டுக்கு விவசாயிகள் தற்போது பதிவு செய்து வருகின்றனர்.

2 புதிய திட்டம் அமல்

நிலத்தடி நீரை மேம்படுத்த மத்திய அரசு 'ஜல் சக்தி அபியான்' என்ற திட்டத்தை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது. ஏரி, குளங்களை தூர்வாருதல், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற பணிகள் செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்தில் நமது மாவட்டத்திலும் பணிகள் செய்யப்படும்.

வாரம் ஒரு கிராமம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் மற்றொரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரைச் சேர்ந்த 50 பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால், அங்குள்ள குளத்தை தூர்வாருதல், மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் செய்யப்படும். அதிகாரிகள் அனைவரும் அங்கு வருவார்கள். கிராம மக்களும் இணைந்து பணி செய்ய வேண்டும். ஒரு நாள் மட்டுமே நடைபெறும் இப்பணிக்கு தனியார் நிறுவனங்களின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறப்படும். ஒவ்வொரு வாரமும் ஒரு கிராமத்தைச் தேர்வு செய்து இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.

எரிவாயு விவகாரம்

குலையன்கரிசலைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், `தங்கள் கிராமத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினர்.

கலப்பட பனங்கற்கண்டு

உடன்குடி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் உள்ளிட்டோர், `உடன்குடி பகுதியில் கலப்பட பனங்கற்கண்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்’ என்றனர்.

குரும்பூர் தமிழ்மணி, `ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்’ என வலியுறுத்தினார். `இத்திட்டத்துக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது’ என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டம் 4 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றதால், வழக்கத்தை விட விவசாயிகள் கூட்டம் அதிகமாக நேற்று காணப்பட்டது.

கிராமங்களில் இருந்து பெண்கள் மற்றும் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்ததால், அரங்கின் பின் பகுதியிலும், நுழைவு வாயிலிலும் ஏராளமானோர் நின்று கொண்டே இருந்தனர். இதனால், கிராம மக்களின் மனுக்களை ஆட்சியர் உடனுக்குடன் பெற்று, அவர்களை அனுப்பி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x