Published : 28 Jun 2019 12:38 PM
Last Updated : 28 Jun 2019 12:38 PM

தமிழகம் முழுவதும் 12,500 இடங்களில் கிராம சபைக் கூட்டம்

தமிழகம் முழுவதும் 12,500 கிராம ஊராட்சிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) கிராம சபைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 1-ம் தேதி நடக்க வேண்டிய கிராமசபை கூட்டம், மக்களவை தேர்தல் நடைமுறைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இன்று (ஜூன் 28) நடந்து வருகிறது.

இந்த முறை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை என்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் கிராமப் பஞ்சாயத்தின் செயலர்கள் கிராம சபைக் கூட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊர் பெரியவர்கள், ஊர் பிரச்சினைகளை முன்னின்று எடுத்துச் செல்லும் இளைஞர்கள் தலைமை ஏற்றுக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.  பஞ்சாயத்து அலுவலகம், ஊர் பொது இடம், பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

பல்வேறு கிராமங்களில் இளைஞர்களும் பெண்களும் முழு வீச்சில் கலந்துகொண்டு மதுக்கடை அகற்றம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், மீத்தேன் திட்டம் எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் எதிப்பு உள்ளிட்ட தங்கள் கிராமம் சார்ந்த பிரச்சினைகளை தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளனர்.

கிராம சபைக் கூட்ட நடைமுறைகள்

ஊராட்சி மன்றத்துடன் கலந்தாலோசித்து கிராம சபைக்கான கூட்டப் பொருளை தயார் செய்து குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பாக, கூட்டம் குறித்த அறிக்கையை ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிட வேண்டும். தண்டோரா, துண்டுப் பிரசுரம் மற்றும் முக்கிய இடங்களில் விளம்பரம் செய்து, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

மதச்சார்புடைய வழிபாட்டுத் தலங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது. ஒரே ஊராட்சியை சேர்ந்த பல குக்கிராமங்கள் இருப்பின் சுழற்சி முறையில் வெவ்வேறு குக்கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறை. ஒரு கிராம சபைக் கூட்டத்துக்கு ரூ.1000-ம் வரை ஊராட்சி நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம் என்பது மரபாகக் கடைபிடிக்கப்படுகிறது.

கிராம சபைக் கூட்டங்கள் குறித்து அரசு போதிய விளம்பரம் செய்யாததால் கூட்டங்கள் நடப்பதே மக்களுக்குத் தெரியாத சூழலும் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x