Published : 08 Sep 2018 03:58 PM
Last Updated : 08 Sep 2018 03:58 PM

முகப்பேரில் திருமண நிகழ்ச்சியில் மோதல்: கத்திக்குத்தில் காயம்பட்ட இளைஞர் 3 நாட்களுக்குப் பின் உயிரிழப்பு: 3 பேர் கைது

முகப்பேர், ஜெஜெ நகரில் திருமண விழாவில் சாதாரணமாக ஏற்பட்ட மோதலை மனதில் வைத்து வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (28 ) இவர் தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த மதனுக்கும் (24 ) ஜெயக்குமாருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துக்கொண்டனர். அப்போது மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் திட்டி விலக்கி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மதனுக்கு இது கவுரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதை விடக்கூடாது, தன்னை தாக்கிய ஜெயக்குமாரை பழிவாங்கவேண்டும் என்று துடித்துள்ளார். அன்று நள்ளிரவில் மதன் தனது நண்பர்கள் கிருஷ்ணன் (24), அமீர் (24) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிலிருந்த ஜெயக்குமாரை வெளியே அழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண வாக்குவாதம் என்று ஜெயக்குமார் சாதாரணமாக பேசிய நிலையில் மதன் தன்னிடம் இருந்த கத்தியால் ஜெயக்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த ஜெயக்குமாரை விட்டுவிட்டு மூவரும் ஓடிவிட்டனர்.

ஜெயக்குமார் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜெஜெ நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் ஆபத்தான நிலையில் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சையில் இருந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை முயற்சி வழக்கிலிருந்து (307) கொலை வழக்காக (302) போலீஸார் மாற்றினர். கொலை செய்த வழக்கில் மதன், அமீர், கிருஷ்ணன் மூவரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x