Published : 11 Sep 2018 11:23 AM
Last Updated : 11 Sep 2018 11:23 AM

குட்கா முறைகேடு; போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்

குட்கா முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

அண்ணாநகரைச் சேர்ந்தவர் மாதவராவ். இவர், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை, சென்னை அருகே, செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் மறைத்து வைத்திருந்தார். இவரது வீடு, அலுவலகம், கிடங்கு உள்ளிட்ட பல இடங்களில், 2016-ல், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியது. இதில் முறையாக விசாரணை நடக்கவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

மாதவ் ராவ் டைரி அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் செங்குன்றத்தில் அந்த நேரத்தில் உதவி ஆணையராக இருந்தவர் மன்னர் மன்னன், ஆய்வாளராக இருந்தவர் சம்பத்குமார். தற்போது இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் 2016-ம் ஆண்டு தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்திலும் உதவி காவல் ஆணையர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் குமார் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பிரஸ்மீட்டிலும் இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டிருந்தார். கடைக்கோடி அதிகாரிகளான இவர்கள் நேரடியாக அந்த நேரத்தில் அங்கு பணியிலிருந்ததால் இவர்கள் மூலம் பணம் கைமாறியதாகக் கூறப்பட்டது.

இவர்களை சிபிஐ கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு இன்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சம்பத் குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். மன்னர் மன்னன் ரயில்வே டிஎஸ்பியாக மதுரையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x