Last Updated : 28 Sep, 2018 08:46 AM

 

Published : 28 Sep 2018 08:46 AM
Last Updated : 28 Sep 2018 08:46 AM

கேப்ஸ்யூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி 

கடலூர் மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரி ஒருவர், கேப்ஸ்யூல் மூலம் நேரடி விதைப்பு செய்து நெல் சாகுபடியில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது சேலவிழி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவக்குமார், விதை நெல்லை நாற்றங்காலில் நேரடியாக இடாமல், ஜெலட்டின் கேப்ஸ்யூல்களில் அடைத்து சாகுபடி செய்து வருகிறார்.

இது குறித்து சிவக்குமார் கூறியது: திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கேப்ஸ்யூல் மூலம் பயிர் செய்வதை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். இதனை நானும் பின்பற்றி விவசாயம் செய்துள்ளேன். ஒரு கேப்ஸ்யூலில் மூன்று விதை நெல், நன்கு தூளாக்கப்பட்ட மணிலா புண்ணாக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கை நிரப்ப வேண்டும். இதனை 22 செமீ இடைவெளியில் ஒன்று வீதம் நட வேண்டும். நட்ட சில நிமிடங்களில் கேப்ஸ்யூல் கரைந்து விடும். மணிலா, வேப்பம் புண்ணாக்கு செறிவுடன் விதை நெல்லைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்திருக்கும்.

இந்த முறையில் விதைக்கு ஊட்டம் அளிக்க மணிலா புண்ணாக்கும், பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்பம் புண்ணாக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையால் அதிக மகசூல் கிடைக்கும். குறைந்த செலவில் அதிக லாபம் பெறமுடியும்.

ஒரு ஏக்கரில் கேப்ஸ்யூல் விதை நடவு செய்தேன். தற்போது அது முளைத்துள்ளது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்ஸ்யூல்கள் தேவைப்பட்டன. ஆயிரம் கேப்ஸ்யூல்களின் விலை 150 ரூபாய் மட்டுமே.

நாற்றாங்கால் விதைப்பில் ஒரு ஏக்கருக்கு 35 கிலோ விதை தேவைப்படுகிறது. புதிய முறையான இந்த கேப்ஸ்யூல் விதைப்பில் சுமார் 2 அல்லது 3 கிலோவுக்கும் குறைவாகவே விதை நெல் தேவைப்படுகிறது. நேரடி செல் விதைப்புக்கு ஒரு ஏக்கருக்கு 40 கிலோ விதை தேவைப்படுகிறது. மேலும், இந்த புதிய முறையில் போதிய இடை வெளியோடு நடவு செய்தலை மேற்கொள்கிறோம். இதனால் களைகள் குறைகின்றன. குறிப் பிட்ட இடைவெளியில் பயிர் வளர் வதால் அடித் தூர் பகுதிக்கு காற்று சென்று, அங்கு நோய்களின் தாக்கம் குறைகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x