Last Updated : 06 Jun, 2019 04:53 PM

 

Published : 06 Jun 2019 04:53 PM
Last Updated : 06 Jun 2019 04:53 PM

நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர ரயில் கோரிய வழக்கு தள்ளுபடி

நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் ரயில் வசதி ஏற்படுத்தக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,       

"திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புலா, திருச்சூர் உள்பட கேரளாவின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ரயில் மூலமாக சென்னை செல்கின்றனர். இதனால் மதுரை, நெல்லை, நாகை மற்றும் தூத்துக்குடி பகுதியிலிருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

2012-ம்  ஆண்டிற்கு பின்னர், சென்னை- கன்னியாகுமரி வழித்தடத்தில் புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. அந்தியோதயா ரயில் சென்னை- செங்கோட்டை வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. 

சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. தொடக்கம் முதலே தமிழகத்தில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது உள்பட ரயில்வேயின் திட்டங்களை முன்னெடுப்பதில் சுணக்கம் காணப்படுகிறது.

இதனால் பொதுமக்களே அதிகளவில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் ரயில்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, உரிய இடத்தில் முறையிட்டு நிவாரணம் தேடிக்கொள்ள உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x