Published : 22 Jun 2019 04:43 PM
Last Updated : 22 Jun 2019 04:43 PM

அரசியலில் புத்திமதி கூறுவதைத் தவிர்க்க வேண்டும்: கே.என்.நேருவுக்கு தமாகா இளைஞரணித் தலைவர் பதில்

அரசியலில் நீங்கள் எங்களுக்குப் புத்திமதி கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கே.என்.நேருவுக்கு தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தங்களுடைய கூட்டணிக் கட்சியின் உட்கட்சி விவகாரத்தைப் பேசும்போது காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது என்று கூறியிருந்தார். இது அவர்கள் கூட்டணி இடையேயான பிரச்சினையாகும்.

காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் ஏற்பட்ட விரிசலுக்குக் காரணம் அப்போது கழகத்தை விமர்சித்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யுவராஜா மற்றும் இன்னொருவர் என்று கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார். அவருக்கு எனது விளக்கம் என்னவென்றால் அப்போது நான் வகித்த, எனது கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு தலைமை எனக்கு என்ன பணி கொடுத்ததோ அந்தப் பணியை மட்டுமே நான் செய்தேன்.  நான் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மக்கள் தலைவர் மூப்பனாரின் வழியில் அரசியல் செய்து கொண்டிருப்பவன். மேலும், தனிப்பட்ட ஒரு நபரைத் தாக்கிப் பேசுவதையோ அல்லது எந்த ஒரு இயக்கத்தையோ புண்படுத்த வேண்டும் என்று செயல்பட்டது கிடையாது.

அப்போதைய எனது தலைமை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றும், ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தது. ஆகவே, கட்சியைப் பலப்படுத்துவதே என் நோக்கமாக இருந்தது. அதை முதலில் கே.என்.நேரு புரிந்துகொள்ள வேண்டும்.

தனிநபர் விமர்சனத்தைப் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி தொடங்கி மிகப்பெரிய தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக திமுக இன்றுவரை செயல்பட்டு வந்துள்ளது. இதையும் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

அரசியலைப் பொறுத்தவரையில், தான் சார்ந்த இயக்கத்தை பலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். கட்சியைப் பலப்படுத்துவது என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. அதனால், இரண்டையும் ஒன்று சேர்த்து பார்ப்பது என்பது மிகவும் தவறான ஒன்றாகும். அரசியலில் நீங்கள் எங்களுக்குப் புத்திமதி கூறுவதைத் தவிர்க்க வேண்டும். நான் எப்பொழுதும் அனைத்து அரசியல் தலைவர்கள் மீதும், அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பும், மரியாதையும் வைத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் இயக்கம்தான் பெரிது. எனவே, வரும் காலங்களில் தனிமனித விமர்சங்களைத் தவிர்த்து அரசியல் நட்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுகிறேன்'' என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x