Published : 25 Jun 2019 12:22 PM
Last Updated : 25 Jun 2019 12:22 PM

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 530-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் 2.5 லட்சம் வரையான இடங்கள் உள்ளன. இந்தப் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளக் கலந்தாய்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே உயர்கல்வித் துறையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பொறியியல் கலந்தாய்வுக் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் சுரப்பா விலகினார். இதையடுத்து பொறியியல் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டது.

இதற்கிடையே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 25-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். அதன்படி, கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தரமணியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 141 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரி வந்து கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். மதியமும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?

அண்ணா பல்கலைக்கழகத் தரவரிசை

தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களின் சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. (https://aucoe.annauniv.edu/passpercentndrnkdetails.htm)

இந்தப் பட்டியல் தேர்வு வெற்றியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வெற்றிபெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் கல்லூரிகளைத் தரம் பிரிப்பது எப்படி?

தேசியத் தரப்பட்டியல்

கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி, தொழில்ரீதியான நடைமுறைகள், வேலைவாய்ப்பு, கல்லூரியைக் குறித்த பொதுவான கருத்து உள்ளிட்ட பல தரவுகளின் அடிப்படையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (‘நிர்ஃப்’) என்ற தரவரிசையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

(https://www.nirfindia.org/2019/EngineeringRanking.html). இந்த ஆண்டில் தெரிவு செய்யப்பட்டிருக்கிற 200 இந்தியப் பொறியியல் கல்வி நிறுவனங்களில், 40 கல்வி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x