Last Updated : 06 Jun, 2019 12:00 AM

 

Published : 06 Jun 2019 12:00 AM
Last Updated : 06 Jun 2019 12:00 AM

விழுப்புரத்தில் இருந்து நாடு முழுவதும் பயணிக்கும் தங்க மூக்குத்திகள் தொழில் கிடைத்தாலும்; ஊதியமின்றி தவிக்கும் பொற்கொல்லர்கள்

நகைகளை விற்கும் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும், உள்ளூர் நகைக் கடையாக இருந்தாலும் நிறுவனங்கள் வளர்ந்தாலும், அவர் களுக்கு நகைகளை சப்ளை செய்யும் பணியை இன்றளவும் உள்ளூர் பொற்கொல்லர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர். அதில், சிறிய அளவிலான மூக் குத்தியை அதிக அளவு செய்து, இந்தியா முழுவதும் அதிக அள வில் அனுப்பி வைப்பதில் விழுப் புரம் பொற்கொல்லர்கள் முதலி டத்தில் உள்ளனர்.

தற்போது, புது டிரெண்டாக மீண்டும் மூக்குத்தி அணிவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், விழுப்புரம் மூக்குத்தி களுக்கு இன்னும் மவுசு கூடியிருக் கிறது. ஒரு மாதத்துக்கு சுமார் 10 முதல் 12 டன் எடை கொண்ட மூக் குத்திகள் சென்னை, சவுகார்பேட் டைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விழுப்புரம் மூக்குத்திகள் பயணிக்கின்றன.

10 ஆயிரம் பொற்கொல்லர்கள்

இதுகுறித்து விழுப்புரத்தில் மூக்குத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள பொற்கொல்லர்கள் கூறியதாவது: 1980-ம் ஆண்டுக்குப் பிறகு தங்களிடம் சேதாரமாக கிடைத்த தங்கத்தை கொண்டு விழுப்புரம் பொற்கொல்லர்கள் மூக்குத்தி, குழந்தைகள் மோதிரம் போன்ற வற்றை சிறிய அளவில் செய்யத் தொடங்கினர். அப்படியே இத் தொழில் படிப்படியாக வளர்ந்து விழுப்புரம் மூக்குத்திக்கென்று தனிச்சந்தை உருவாகியது. தற் போது இத்தொழிலில் நேரடியாக 10 ஆயிரம் பொற்கொல்லர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் இருக்கின்றனர்.

100 கிராம் தங்கத்தில் சுமார் 300 முதல் 350 மூக்குத்திகள் வரை செய்ய முடியும். இதில் ஒரு மூக் குத்திக்கு கூலியாக 12 ரூபாயும், 10 சதவீத சேதாரமும் நிர்ணயிக் கப்பட்டது. வேலை போட்டியால், தற்போது கூலி முழுவதுமாக நிறுத்தப்பட்டு பொற்கொல்லர் களின் சொந்த தங்கத்துக்கு 6 சதவீத சேதாரமும், கடைக்காரர்கள் கொடுக்கும் தங்கத்துக்கு 4.5 சதவீத சேதாரமும் கொடுக்கப்படுகிறது. இதனால் இந்தப் பணியில் இருக் கும் பொற்கொல்லர்கள் வாழ்க் கையை நடத்தவே போராட வேண்டி யுள்ளது. இதனால் மனம் உடையும் சில பொற்கொல்லர்கள் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

தங்கத்துக்கு முதலீடு செய்ய முடியாத பொற்கொல்லர்கள் சிலர் வெள்ளி மூக்குத்திகளை தயா ரிக்க தொடங்கி விட்டனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காரைக் குடியில் பொற்கொல்லர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் தலா 200 கிராம் தங்கத்தை கடனாக மத்திய அரசு அளித்தது. அதை தற்போதைய மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைவினைஞர்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் சி. உமாபதி தெரி வித்ததாவது: தங்கத்தை கொடுத்து நகைகள் செய்யச் சொன்ன நகை கடைக்காரர்கள் தற்போது பொற் கொல்லர்களையே முதலீடு செய்ய வைத்து நகை செய்யச் சொல் கின்றனர். எந்தத் தொழிலுக்கும் ஊதியம் என்று ஒன்று உண்டு. ஆனால் பொற்கொல்லர்கள் செய்யும் நகைகளுக்கு ஊதியம் இல்லை. சேதாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்பது என்ன நியாயம்? விழுப்புரத்தில் பொற்கொல்லர்கள் வசிக்கும் வீதிகளில் தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

பொற்கொல்லர்கள் தங்க ளுக்கு வேண்டிய தங்கத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தேவைப்படும்போது உடனே கிடைப்பதில்லை. தேவைப்படும் தங்கத்தை கள்ளச் சந்தையிலே வாங்க வேண்டியதுள்ளது. இதைத் தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘க்ரே மார்க்கெட்' என்று குறிப்பிட்டார்.

மாதம் 10 முதல் 12 டன் தங்கம் தேவைப்படும் இடத்தில் வங்கிகள் மூலம் இவ்வ ளவு தங்கத்தை வாங்க முடிய வில்லை. ஜிஎஸ்டி வரி செலுத்தி தங்கம் வாங்க நாங்கள் தயார். தட்டுப்பாடு இல்லாமல் தங்கம் கொடுக்க முடியுமா? மேலும், தங்கத்துக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே விழுப்புரம் மூக்குத்திக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாக விழுப்புரம் எம்பி ரவிகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இடையில் வந்துபோன திட்டம்

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, பொற்கொல்லர்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கு பதில் தங்கக் கட்டிகள் வழங்கும் திட்டம் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுத்தியது. இதில் தங்கக் கட்டிகளை பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தை வட்டியுடன் தவணை முறையில் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பலருக்கு தங்கக் கட்டிகள் வழங்கப்பட்டன. ஆனால் பெரும்பாலானோர் கடனை திருப்பி செலுத்தாததால் திட்டம் விரிவுபடுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x