Published : 08 Jun 2019 03:01 PM
Last Updated : 08 Jun 2019 03:01 PM

அதிமுக தொண்டர்களின் கட்சி; இங்கு அனைவருமே தலைவர்கள் தான்: முதல்வர் பழனிசாமி

அதிமுக தொண்டர்களின் கட்சி எனவும், தலைவர் என்ற சொல்லுக்கே இடமில்லை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

திறக்கப்பட்டதாக திமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனரே?

பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன. இப்பொழுது திறப்பு விழா நடத்தியதால், அங்கு 35% போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதற்காகவே திமுகவினர் பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். மக்களுக்கு சேவை செய்வதற்காக அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கவில்லை.

தேவையில்லாத இடங்களில் பாலம் கட்டியிருப்பதாகச் சொல்கின்றனர். அப்படி, எங்கு தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டது? மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் பாலங்கள் கட்டப்பட்டன, அரசாங்களுக்காக அல்ல. இதுதொடர்பான விஷயத்தில் சட்டம் படித்துள்ள வழக்கறிஞரான திமுக எம்.பி. பார்த்திபன் பச்சைப் பொய் கூறியுள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளாரே?

தெரியவில்லை. அந்தப் பேட்டியை முழுமையாகப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். அதன்பிறகு தான் கருத்து சொல்ல முடியும்.

அதிமுகவில் கோஷ்டிப் பூசல் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

இது தவறான கருத்து. அமமுகவிலிருந்து எத்தனை பேர் அதிமுகவுக்கு வருகின்றனர். கோஷ்டிப் பூசல் இருந்தால் அவர்கள் வருவார்களா? எதிர்க்கட்சியினர் இதனைப் பரப்புகின்றனர். அதிமுக பலம் பொருந்திய கட்சி. அதனால் தான், இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ளோம்.

தேர்தலுக்குப் பிறகு ஒரேயொரு எம்.பி. மட்டுமே ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். இடைத்தேர்தலில் வென்றவர்கள் செல்லவில்லை. அவர்களைத் தடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளதே?

தவறான கருத்து. பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நினைவிடம் அமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுத்தம் செய்தால் தான் அங்கு உள்ளே செல்ல முடியும். பணிகள் தடைபடக் கூடாது.

இடைத்தேர்தலில் அதிக இடங்களை வென்றதற்கும், மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே ஜெயித்ததற்கும், இரட்டைத் தலைமை தான் காரணமா?

அதிமுக தொண்டர் கட்சி. தொண்டர்களால் ஆளுகின்ற கட்சி. இங்கிருக்கும் அனைவரும் தலைவர்கள் தான். தலைவர் என்ற சொல்லுக்கே இடமில்லை.

உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக தயாரா?

நாங்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு உண்டான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x