Last Updated : 21 Jun, 2019 04:09 PM

 

Published : 21 Jun 2019 04:09 PM
Last Updated : 21 Jun 2019 04:09 PM

அரசுப்பள்ளியில் படிப்போருக்கே சமூக அக்கறை ஏற்படும்; லண்டனில் படித்த மகனை அரசுப் பள்ளியில் சேர்த்த தாய்

அரசுப்பள்ளியில் படிப்போருக்கே சமூக அக்கறையும், விழிப்புணர்வும் ஏற்படும் என்பதால் லண்டன் பள்ளியில் படித்த தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார் விழுப்புரத்தைச் சேர்ந்த தாய்.

விழுப்புரம் அருகே நன்னாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லண்டனில் படித்த சிறுவன் 2-ம் வகுப்பில் சேர்ந்துள்ளார் என்ற தகவல் கிடைத்ததும் அப்பள்ளிக்கு சென்றோம். பள்ளியில் பிளாஸ்டிக் சேர்களில் மாணவர்கள் வட்டமாக அமர்ந்திருக்க ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

சற்று நேரம் காத்திருந்து வகுப்பு முடிந்தவுடன் 'லண்டன் ரிட்டர்ன்' மாணவர் அன்பு செல்வனிடம் பேசியபோது, "அப்பா சிவபிரகாஷ், அம்மா சுபாஷிணி ஆகியோர் லண்டனில் வேலை செய்தனர். அங்குள்ள பள்ளியில் படித்து வந்தேன். அம்மா தற்போது இந்தியா வந்துள்ளார். இப்போது இங்குள்ள பள்ளியில் படித்துவருகிறேன். இங்கு கடுமையான அனல் அடிக்கிறது. அதனால் இப்பள்ளி பிடிக்கவில்லை" என்று மழலைக்குரலில் சொன்னார்.

இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள மாணவர் அன்பு செல்வனின் தாயார் சுபாஷினியிடம் பேசியபோது, "லண்டனில் என் கணவர் சிவபிரகாஷ் மென்பொருள் பொறியாளராகவும், நான் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகவும் ( Supply Teacher )பணியாற்றிவந்தேன். நான் மேற்கொண்டு படிப்பதற்காக இந்தியா வந்துள்ளேன்.

என் மூத்தமகன் விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவருகிறார். இளைய மகனை சேர்க்க விழுப்புரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்றுபார்த்தேன். ஓவ்வொரு பள்ளியிலும் வகுப்பறைக்கு 45 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். வகுப்புக்கு 30 மாணவர்கள் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

மாணவர்களுக்கு இறைவணக்கத்துடன் யோகா, வாரம் ஒரு முறை மூலிகை கஞ்சி, காற்றோட்டமான வகுப்பறைகள், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் என நான் எதிர்பார்த்தப்படி இருந்த பள்ளியாக நன்னாடு பள்ளி எனக்கு தெரிந்தது. மேலும் தனியார் பள்ளிகளில் வேலை பளுவில் ,குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களில் மன அழுத்தத்தை தன்னிடம் படிக்கும் மாணவர்களிடம் காட்டுகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என எண்ணுகிறேன்.

என் மற்றொரு மகன் தனியார் பள்ளியில் படிப்பதால் இதை நேரடியாக உணர்ந்தேன். மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை தனியார் பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. நானும் என் கணவரும் பள்ளி இறுதிவரை அரசுப் பள்ளியில்தான் படித்தோம். அதுவும் தமிழ் வழியில். அதனால் எங்களின் மேற்படிப்புகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. அரசுப்பள்ளியில் படித்தால் சமூக அக்கறையும், விழிப்புணவும் ஏற்படும்", என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x