Published : 20 Jun 2019 05:20 PM
Last Updated : 20 Jun 2019 05:20 PM

சிவகங்கை அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரரின் நடுகல் சிலை கண்டெடுப்பு

சிவகங்கை அருகே பில்லூரில் அழுதாங்கி பிள்ளை கிராமத்தில் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த போரில் வீரமரணமடைந்த வீரர் ஒருவரின் நடுகல் சிலை கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநரும், தொல்லியல் ஆய்வாளருமான கா.காளிராசா, சிவகங்கை ஒன்றியம் பில்லூர் அருகே அழுதாங்கிபிள்ளை கிராமத்தில் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய காட்டுப்பகுதியில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் வீரன் சிலை கண்டறிந்துள்ளார்.

இந்த நடுகல் ஆய்வு குறித்து கா.காளிராசா, "போரில் இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படுவது வீரக்கல்.

பெரும் படையினரோடு போரிட்டு வீரமரணமடையும் வீரனின் நினைவாக அமைக்கப்படுவது நடுகல் எனப்படும். இத்தகைய நடுகல் பற்றி சங்க இலக்கிய பாடல்களும், தொல்காப்பியமும் விவரித்துக் கூறுகின்றன.

இங்குள்ள நடுகல் வீரர் சிலையில், கையில் வில் அம்பு ஏந்திய நிலையில் ஒரு கையில் வில் தண்டையும், மறுகை நாணில் அம்பேற்றியவாறும், வீரனின் முதுகுப் பகுதியில் அம்புகள் வைக்கும் கூடையும் உள்ளது.

இடுப்பிலிருந்து முழங்காலுக்கு ஆடையும் கை புயங்களில் வீரக்கழலும், காதில் காதணியும் உள்ளது. மேலும் தலை முடி கொண்டையாக கட்டப்பெற்றுள்ளது. வீரனின் இடதுகால் அருகே சிறிய உருவத்தில், தலைமுடி கொண்டையிட்டு கைகள் கூப்பிய நிலையில் உள்ளது.

இவைகளை வைத்துப் பார்க்கும் போது பெரிய உருவம் படைத்தளபதியாகவும், சிறிய உருவம் படை வீரனாகவோ, மனைவியாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சிலையின் மேல் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்சேர்ந்த எழுத்து வடிவில்  முத்தணன் என எழுதப்பட்டுள்ளது" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x