Published : 01 Jun 2019 03:12 PM
Last Updated : 01 Jun 2019 03:12 PM

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவப்படிப்புகளுக்கும் நீட் தேர்வு?: அமைச்சர் விஜய்பாஸ்கர் பேட்டி

ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை  என அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு மாநில பாடத்திட்ட அடிப்படையில் பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் நடந்து வந்தது. இதனால் நன்றாக படித்த கிராமப்புற மாணவர்கள் மருத்துவக்கல்வியை பெற முடிந்தது.

ஆனால் மத்திய அரசு திடீரென நீட் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழ்வழிக்கல்வியில் பயின்ற மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் மருத்துவக்கனவு பாதிக்கப்படும் என்பதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் இருக்கும்வரை நீட் நுழைவுத்தேர்வை அனுமதிக்கவில்லை.

அவரது மறைவுக்குப்பின் தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழக கிராமபுற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய தேர்வில் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே தேர்வு பெற்றனர்.

மறுபுறம் சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் எழுதிய மாணவர்களில் 9000 பேரில் 4500 பேர் தேர்ச்சி பெற்றனர். நீட் நுழைவுத்தேர்வுக்காக மாணவர்கள் அதற்கான மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறவேண்டி இருந்ததால் பெற்றோர்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் வரை பயிற்சி மையத்துக்கு செலவிடும் நிலை ஏற்பட்டது.

ஏழைப்பெற்றோர், வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் அரசு மையத்தை நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெற்றிபெற்றால் விரும்பாத மாநிலங்களில் நீட் ரத்து என அறிவித்தது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் இதை எதிர்க்கின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனை ஊழியர்களின் குழந்தைகளுக்கு நவீன காப்பகம் மற்றும் ரத்த மாதிரிகளை விரைவாக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவதற்கான நவீன குழாய் வழி இயந்திரத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ், படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப வினியோகம் செய்யப்பட்டு கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அப்போது தமிழகத்தில் சித்தமருத்துவம், யுனானி, ஹோமியாபதி, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு வர உள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவபடிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது, நீட் மூலம் மாணவர் சேர்க்கை குறித்து அரசு கூடி கொள்கை முடிவெடுக்கும் என தெரிவித்தார். 

ஆனாலும் கடந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு இல்லாமல் நடத்திய அரசு இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மூலம் நடைபெறும் என தமிழக அரசு வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x