Published : 12 Mar 2018 09:14 AM
Last Updated : 12 Mar 2018 09:14 AM

’மலையேற்றத்துக்கு ஏற்ற குரங்கணி’

தேனி மாவட்டம், போடிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைவாசஸ்தலம் குரங்கணி கிராமம்.

இம்மாவட்டத்தில் குரங்கணி, கொட்டகுடி, மேல்மூட்டம், கீழ் மூட்டம், முதுவாக்குடி, சாலைப்பாறை, டாப்ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், அண்ணாநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

குரங்கணி மலையானது மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயிற்சிக்கு மிகவும் ஏற்றது என்பதால் இயற்கையை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வருகை தருவது வழக்கம். குரங்கணி மலையின் மைய கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் டாப் ஸ்டேஷன் உள்ளது. கேரளாவில் உள்ள மூணாறுக்கு இங்கிருந்து அடர்ந்த வனப் பகுதிகள், புல்வெளிகளை கடந்து நடந்தே செல்லலாம்.

அருகிலுள்ள மூணாறு மலை மற்றும் கொலுக்கு மலையில் (8 ஆயிரம் அடி) உலகின் மிக உயர்ந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. மலையில் உள்ள மைய கிராமத்தில் 50 வீடுகளும் 200 மக்களும் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயத் தொழிலாளிகள். டாப் ஸ்டேஷன், மீனாறு, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. மைய கிராமத்திலும் 2 தங்கு குடில்களும் உள்ளன.

குரங்கணி மலை கிராமத்தில் சுற்றுலா மாளிகை, காவல்நிலையம், விஏஓ அலுவலகம், சுகாதார மையம், உண்டு உறைவிட பள்ளி, நகராட்சியின் குடிநீர் தேக்கத் தொட்டி, காப்பி ஆராய்ச்சி மையம், சுற்றுலாத் துறை அலுவலகம் உள்ளன. இந்த மலை கிராமத்துக்கு செல்ல போடியில் இருந்து 16 கி.மீ. துாரத்தில் குரங்கணி மலைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 2013-ல் குரங்கணி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட ரிசர்வ் மலைப் பகுதியாக வனத்துறை அறிவித்து கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்படுவது தடுக்கப்பட்டது.

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்கெனவே மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்துள்ளனர். அதன்பிறகே இந்த இடத்தின் இயற்கை எழில் வெளியுலகுக்கு தெரியவந்தது. தற்போதும் இந்த இடங்களில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. போடியில் இருந்து சாலை மார்க்கமாக 15 கி.மீ. தூரம் சென்றால் குரங்கணியை அடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x