Published : 17 Mar 2018 07:53 AM
Last Updated : 17 Mar 2018 07:53 AM

அதிமுக கொடியின் சாயலில் அமமுக கொடி: தினகரனிடம் இழப்பீடு கோரி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) கொடி, அதிமுக கொடியின் சாயலில் இருப்பதால், தினகரன் ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடக் கோரி முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான கே.பழனிசாமி தரப்பில் சிவில் வழக்குத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு:

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ வான தினகரன் சமீபத்தில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்த அமைப்பின் கொடி அதிமுக கொடியின் சாயலில் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. வேறு எந்த கட்சியும் அதிமுகவின் கொடியைப் போன்ற வடிவமைப்பைப் பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே எங்கள் கட்சியின் விதிகளில் தெளிவாக உள்ளது.

எனவே தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் புதிதாக உருவாக்கியுள்ள கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

அதிமுகவின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக டிடிவி.தினகரன் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான கே.பழனிசாமி சார்பில் சிவில் வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், ‘‘ அதிமுகவின் கட்சிக்கொடி தொடர்பாக ஒரு தமிழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும். அதன்பிறகு இதுதொடர்பாக சிவில் வழக்குத் தொடரலாம்’’ என அனுமதியளித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x