Published : 20 Mar 2018 08:08 AM
Last Updated : 20 Mar 2018 08:08 AM

தனிப்பட்ட பிரச்சினைகளுக்காவே காவலர்கள் தற்கொலை: பேரவையில் முதல்வர் அறிக்கை

காவலர்கள் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று முதல்வர் கே.பழனிசாமி பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது திமுக உறுப்பினர் ரங்கநாதன் பேசும்போது, அயனாவரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஒருவரும், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் காவலர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து குறிப்பிட்டார்.

முதல்வர் கே.பழனிசாமி இதற்கு பதிலளித்ததாவது: காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் குடும்ப பிரச்சினை, உடல் நலக்கோளாறு, காதல் விவகாரம் உள்ளிட்ட சில தனிப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அண்மையில், ஆயுதப்படையில் 2-ம் நிலை காவலராக இருந்த அருண்ராஜ் மார்ச் 4-ம் தேதி அதிகாலை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், தான் பணியில் வைத்திருந்த துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், மார்ச் 7-ம் தேதி அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், தனது அலுவலக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரு சம்பவங்களிலும் அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வருகிறது.

இருப்பினும், காவலர்கள் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை, ஆரோக்கியத்தை பேணிக்காக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலர்கள் அனைவருக்கும் கூடுமானவரை வாராந்திர ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரங்களில் பணி நேரம் வரன்முறைப்படுத்தப்பட்டு இயன்ற அளவில் 8 மணி நேரம் அளிக்கப்படுகிறது.

அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் உடல் நலன்காக்க அவர்களுக்கு வாராந்திர காவாத்து பயிற்சியுடன் யோகாசனம், உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன் தனியார் மருத்துவமனைகள் மூலம் அவ்வப்போது காவல் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்புகளில் காவலர்கள் மற்றும் அவர் கள் குடும்பத்தினர் பயனுறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x