Published : 08 Mar 2018 09:38 PM
Last Updated : 08 Mar 2018 09:38 PM

கர்ப்பிணி உஷா பலி எதிரொலி; திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் முழுவதும் வாகன சோதனைக்கு தற்காலிகத் தடை?

காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் வாகனத்திலிருந்து கீழே விழுந்து கர்ப்பிணி உஷா பலியான சம்பவத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து திருச்சியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வாகன சோதனை தற்காலிகமாக நிறுத்தி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உறவினர் வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு மனைவி உஷாவுடன் நேற்று மாலையில் புறப்பட்டு திருவெறும்பூர் நோக்கி ராஜா மோட்டார் சைக்கிளில் சென்றார். மனைவி மூன்று மாத கர்ப்பிணி என்பதால் வாகனத்தை மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது வழியில் வாகன சோதனை என்று போலீஸார் மடக்கினர். ராஜா ஹெல்மட் போடவில்லை.

போலீஸார் பின்னர் அனுப்பிய பிறகும், ஆய்வாளர் காமராஜ் விடாமல் துரத்தி வந்து எட்டி உதைத்ததில் கீழே விழுந்த உஷா உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடுமையான கோபாவேசத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பலரும் பலத்த கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸாரின் வாகன சோதனைதான் காரணம் என்ற தகவலால் பொதுமக்கள் கடும் ஆத்திரமடைய செய்தது. இதனால் போலீஸார் பொதுமக்கள் கோபம் தணியும் வரையில் வாகன சோதனையை நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் வாகன சோதனையை நிறுத்தி வைக்க போலீஸார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான உத்தரவை வாய்மொழியாக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x