Published : 03 Mar 2018 08:26 AM
Last Updated : 03 Mar 2018 08:26 AM

பல்வேறு துறைகளுக்காக ரூ.106 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் சார்பில் ரூ.105 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் மற்றும் 9 பாலங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண்துறை சார்பில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஈச்சங்கோட்டையில் அமைந்துள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ரூ.16 கோடியே 93 லட்சத்தில் மாணவ, மாணவியர் விடுதி, பண்ணை அலுவலகம், அலுவலர் குடியிருப்புகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. அதே போல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.49 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்தில் வேளாண் கல்லூரிகளில், மாணவர் விடுதி, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நபார்டு வங்கி உதவியில், புதுக்கோட்டையில் சேமிப்புக்கிடங்கு, உலர் களங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது தவிர, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பள்ளி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான 5 விடுதிக் கட்டிடங்கள் ரூ.6 கோடியே 66 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இவை தவிர, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வேலூரில் ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தையும் முதல்வர் திறந்தார்.

பாலங்கள் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவன வளாகத்தில் ரூ.12 கோடியே 71 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதே போல், கோவை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.18 கோடியே 2 லட்சத்தில் 9 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.துரைக்கண்ணு, சீ.வளர்மதி, கே.சி.கருப்பணன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் ஹன்ஸ் ராஜ் வர்மா, ககன்தீப் சிங் பேடி, ஆ.கார்த்திக், முகமது நசிமுத்தின், ஊரகவளர்ச்சித் துறை இயக்குநர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x