Published : 04 Mar 2018 11:22 AM
Last Updated : 04 Mar 2018 11:22 AM

மதுரை அருகே முனியாண்டி கோயில் திருவிழாவில் 20 ஆயிரம் பேருக்கு சுடச்சுட பிரியாணி விநியோகம்: ஹோட்டல் உரிமையாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களால் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில் 20 ஆயிரம் பேருக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. 3 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து இவ்விழாவை சிறப்பாக நடத்தினர்.

மதுரையை அடுத்த கள்ளிக்குடி-டி.கல்லுப்பட்டி சாலை அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த மக்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். அவர்களின் காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி கோயில் வடக்கம்பட்டியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நாயுடு சமூகத்தினரால் தை மாதமும், ரெட்டியார் சமூகத்தினரால் மாசி மாதமும் வடக்கம்பட்டியில் பிரியாணி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

நேற்று முன்தினம் ரெட்டியார் சமூகத்தினர் பிரியாணி திருவிழாவைக் கொண்டாடினர். இதற்காக 3 மாநிலங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் விழாவில் பங்கேற்க தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். மாலையில், ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாகச் சென்று பொங்கல் வைத்து முனியாண்டி சுவாமியை வழிபட்டனர்.

பின்னர் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 115 ஆடுகள், 360 சேவல்கள் பலியிடப்பட்டு அவற்றின் இறைச்சியைப் பயன்படுத்தி 2 ஆயிரம் கிலோ அரிசியில் 100 அண்டாக்களில் விடிய, விடிய சுவையான பிரியாணி தயாரிக்கப்பட்டது. முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களில் பணியாற்றும் சிறந்த சமையல் கலைஞர்கள் பிரியாணி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஓலைப்பெட்டியில் பிரியாணி

நேற்று அதிகாலையில் முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து, பிரியாணி படையல் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பிரியாணி பிரசாதம் விநியோகம் நடைபெற்றது.

கள்ளிக்குடி, அகத்தாபட்டி, லாலாபுரம், வில்லூர், புளியம்பட்டி உட்பட 20-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் பிரியாணி பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். நன்கொடை அளித்தவர்கள் உட்பட பலருக்கு தூக்குவாளி, ஓலைப்பெட்டியில் பிரியாணி வழங்கப்பட்டது. சுமார் 20,000-க்கும் அதிகமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை பெற்றுச் சென்றனர்.

இந்த விழா குறித்து கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: 1937-ம் ஆண்டு வடக்கம்பட்டியைச் சேர்ந்த நண்பர்களான குருசாமி என்பவர் காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலையும், ராமு என்பவர் கள்ளிக்குடியில் 2-வது ஹோட்டலையும் தொடங்கினர். காலப்போக்கில் சுவையான அசைவ உணவை தயாரித்து வழங்குவதில் முதலிடம் பெற்றதால் தற்போது 1,500-க்கும் அதிகமான ஹோட்டல்கள் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் செயல்படுகின்றன.

இந்த ஹோட்டலில் முதல் பில் அல்லது, முதல் காணிக்கையை முனியாண்டி கோயிலுக்கான உண்டியலில் சேர்த்து விடுவர். ஆண்டு முழுவதும் சேகரமான தொகையை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டு இந்த பிரியாணி திருவிழாவை நடத்துகிறோம்.

வயிற்றுப் பசிக்கு உணவு வழங்குவது தர்மம். ஆனால், ஹோட்டல்களில் உணவு வழங்கிவிட்டு, பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இது பாவம். இந்தப் பாவத்தை போக்க, வாடிக்கையாளர்களின் பணத்தில் இருந்தே முனியாண்டிக்கு பிரியாணி படைத்து, மக்களுக்கு பிரசாதமாக வழங்குகிறோம். முனியாண்டி சுவாமியின் தாய் கிராமம் வடக்கம்பட்டி.

இங்கிருந்து மண் எடுத்துச் சென்று அச்சம்பட்டி, கோபாலபுரம், புதுப்பட்டி உட்பட பல கிராமங்களில் இதுபோல விழாக்களை நடத்துகின்றனர். இருப்பினும் வடக்கம்பட்டி விழாதான் சிறப்பானது. இதற்காக ஹோட்டல்களுக்கு 2 முதல் 3 நாட்கள் விடுமுறைவிட்டு, உரிமையாளர்கள் அனைவரும் வடக்கம்பட்டி வந்து தங்கி விழாவில் பங்கேற்பர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x