Published : 17 Mar 2018 10:40 AM
Last Updated : 17 Mar 2018 10:40 AM

மதுரையின் அரசியல் ‘சென்டிமென்ட்’

முக்கிய கட்சிகள் அனைத்தும் மதுரையை மையமாகக் கொண்டே தங்களின் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் டிடிவி.தினகரனும் மதுரை மேலூரில் தனது புதிய அமைப்பின் பெயர், கொடியை அறிமுகப்படுத்தி இணைந்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், டிடிவி.தினகரன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டபோதும், அவரது வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோதும், அவரது ஆதரவாளர்களே பெரிய அளவில் போராட்டம் நடத்த தயங்கினர்.

அந்த கால கட்டத்தில் மதுரை மேலூரில்தான் மிகப்பெரிய அளவில் அவரது கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது, டிடிவி.தினகரனையும், அவரது ஆதரவாளர்களையும் உற்சாகமடைய வைத்தது. சிறையில் இருந்து வெளியே வந்ததும், மேலூரில் தனக்கு ஆதரவாக பெருங்கூட்டத்தைத் திரட்டி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த மேலூர் முன்னாள் எம்எல்ஏ சாமிக்கு அமைப்பு செயலாளர் பதவியை கொடுத்து கவுரவப்படுத்தினார் தினகரன்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியபோதும், முதல் பொதுக்கூட்டத்தை மேலூரில்தான் நடத்தினார். அப்போதும் அதிக அள வில் கூட்டம் கூடியது. அதன்பின், ஆர்.கே.நகர். தேர்தலில் சுயேச்சையாக நின்ற தினகரன் வெற்றி பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக, தனக்கு ராசியான இடம் என்ற சென்டிமென்ட்டின் அடிப்படையில் புதிய அமைப்பின் பெயர், கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை மதுரை மேலூரில் அவர் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மதுரையில் அரசியல் பயணத்தைத் தொடங்கினால் வெற்றிபெறலாம் என்ற சென்டிமென்ட் உருவாக காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். ஆரம்ப காலத்தில் அவரது அரசியல் வளர்ச்சி மதுரையை மையமாகக் கொண்டே இருந்தது. அப்போது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்தபோது நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் வேட்பாளர் மாயத்தேவர் வெற்றிபெற்றதே இதற்கு சிறந்த உதாரணம். இப்படி எம்ஜிஆருக்கும், மதுரைக்கும் இடையே நிறைய அரசியல் தொடர்புகள் உண்டு.

அதுபோல், விஜயகாந்த் தேமுதிகவை மதுரையில்தான் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராகவும், திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் அரசியலில் வளர்ச்சிபெற்றார்.

அவரை தொடர்ந்து கடந்த மாதம் கமல்ஹாசன் தன்னுடைய புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தை மதுரை ஒத்தக்கடையில்தான் தொடங்கினார். அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தும் புதிய அரசியல் கட்சியை மதுரையில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய அரசியல் நிகழ்வுகளை தீர்மானிக்கும் நகராக மதுரை ஏதோ ஒரு வகையில் இருந்து வருகிறது.

1945-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவரை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருந்தது. அப்போது மதுரை திருப்பரங்குன்றத்தில்தான் காங்கிரஸ் செயற்குழு கூடி காமராஜரை தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக தேர்வு செய்தது. காமராஜருடைய மிகப்பெரிய அரசியல் வளர்ச்சிக்கு இந்த திருப்பரங்குன்றம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

1981-ம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மதுரையில் 5-வது உலக தமிழ் மாநாடு நடந்தது. சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதா அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

அன்று முதல் அவருக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. அதன்பிறகு அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, பின்னர் அக்கட்சியின் தலைவரானார் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x