Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM

மக்களவை தொகுதிகளுடன் மத்திய மண்டலத்தில் சட்டப்பேரவை தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை, கரூர், பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய மக்களவைத் தொகுதிகள் மட்டுமல்லாது, இந்த மண்டலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற தஞ்சாவூர், திருவாரூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்த லும் நடைபெற்றது.

இதில், திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சு.திருநாவுக் கரசர், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜ், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுகவின் செ.ராமலிங்கம், கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் செ.ஜோதிமணி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் ஐஜேகேவின் டி.ஆர்.பாரிவேந்தர், சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மேற்காணும் 7 தொகுதிகளும் கடந்த முறை அதிமுக வசமிருந்தன. தற்போது முடிந்த மக்களவைத் தேர்தலில் இத்தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகள் மத்திய மண்டலத்தில் அடங்கியுள்ளன.

இதில் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் டி.கே.ஜி.நீலமேகம், திருவாரூர் தொகுதியில் பூண்டி கே.கலைவாணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

தமிழகம் முழுவதும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் மத்திய மண்டலத்தில் உள்ள 3 தொகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x