Last Updated : 07 May, 2019 04:17 PM

 

Published : 07 May 2019 04:17 PM
Last Updated : 07 May 2019 04:17 PM

துளி நீரால் துளிர்க்கும் இலைகள்: தகிக்கும் வெயிலில் மரக்கன்றுகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய சிறப்பு உபகரணம்

கோடையில் மரக்கன்றுகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய சிறப்பு உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பப்படும் நீர் துளித்துளியாக வேர்ப்பகுதிக்கு நேரடியாகச் செல்வதால் வெயிலை மீறி கன்றுகள் துளிர்த்து வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் பலரிடத்திலும் மரம் வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் நட்ட கன்றுகள் அனைத்தும் வளர்வதில்லை. நீர் ஊற்றுவதில் இருந்து கால்நடைகளிடம் இருந்து அவற்றைக் காப்பாற்றுவது வரை பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. அதுவும் கோடையில் குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மரம் வளர்ப்புக்கு நீர் பெற முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற நிலையைத் தவிர்க்க தேனியில் தற்போது நீர் மேலாண்மை உபகரணம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மரக்கன்றுகளுக்கு ஒரே நேரத்தில் தண்ணீரை ஊற்றுவதை விட சொட்டு சொட்டாக செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 5, 2 லிட்டர் மினரல் வாட்டர் கேன்களின் அடிப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டு தலைகீழாக கட்டப்பட்டு சிறிய டியூப் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் செல்லும் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.

துளித்துளியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இதன் மெல்லிய குழாய் செடியின் வேர் பகுதியில் பதித்து வைக்கப்படுகிறது. இதனால் நீர் நேரடியாக வேர் பகுதிக்கு தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. பொதுவாக நீரை கன்றுகளுக்கு ஊற்றும் போது மண் உறிஞ்சுதல், ஆவியாதல் போன்றவற்றின் மூலம் நீர் இழப்பு ஏற்படும்.

ஆனால், இம்முறையினால் நீர் விரயமின்றி வேர் பகுதிக்குச் சென்றடைகிறது. முன்மாதிரியாக இதுபோன்ற உபகரணங்கள் தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீடோ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பெருஞ்சித்திரன் கூறுகையில், "முன்மாதிரியாக இப்பகுதியில் இந்த உபகரணம் மூலம் கன்றுகளுக்கு நீரின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறோம். புங்கன், பூவரசு, வாகை போன்ற நிழல்தரும் மரங்களுடன் கொடிக்காய், நாவல் போன்ற கன்றுகளையும் நட்டுள்ளோம். இதன் மூலம் பறவைகளுக்கும் உணவு கிடைக்கும்.

இந்த அமைப்பைப் பார்த்ததும் நடைப்பயிற்சி செல்லும் பலரும் வாட்டர் கேனில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிவிட்டுச் செல்கின்றனர். இதனால் கன்றுகளுக்கு ஒரே நேரத்தில் அதிகளவில் தண்ணீர் கொண்டு வரும் சிரமம் குறைந்துள்ளது. மேலும் பல இடங்களில் இதுபோன்று நீர் மேலாண்மை செய்து கன்றுகளை அதிக அளவில் வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.

வேலிகளையும் தயார் செய்து வருகிறோம். கோடையில் வேர் பிடித்து பலம் பெற்று விட்டால் வரும் மழைக்காலங்களில் தன்னிச்சையாகவே உயர்ந்து வளர்ந்துவிடும்" என்றார் பெருஞ்சித்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x