Last Updated : 27 May, 2019 04:14 PM

 

Published : 27 May 2019 04:14 PM
Last Updated : 27 May 2019 04:14 PM

மோடி அழைத்தால் பதவியேற்புக்குச் செல்வோம்: நாராயணசாமி

மத்திய அரசை நம்பித்தான் புதுச்சேரி உள்ளது எனவும், பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்தால் செல்வோம் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.

முதல்வர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நேருவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.பி. வைத்திலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

"மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆகியுள்ளார். புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசை நம்பித்தான் புதுச்சேரி  உள்ளது. பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்தால் செல்வோம்.

புதுச்சேரிக்குரிய திட்டங்களையும், நிதி ஆதாரங்களையும் அவரிடம் கேட்போம். அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்று பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரியில் வருமானத்தைவிட, செலவு அதிகம். எனவே மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி கேட்டு வலியுறுத்துவேன்.

மத்திய அரசு புதுச்சேரி மக்களின் நலனுக்காக கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவு அளித்து, ஒத்துழைப்போம். எதிரான திட்டங்களை தடுத்து நிறுத்துவோம்''.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x