Published : 22 Apr 2019 09:51 AM
Last Updated : 22 Apr 2019 09:51 AM

பொறியியல் படிப்பு சேர்க்கை: பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது - மே 2 முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3-ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும். அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 2-ம் தேதி தொடங்கும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 530-க்கும் அதிகமான பொறி யியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் 2.5 லட்சம் வரையான இடங்கள் உள்ளன.

இந்தப் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள கலந்தாய்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே உயர்கல்வித் துறையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பொறியியல் கலந்தாய்வுக் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் சுரப்பா விலகினார். இதனால் வரும் கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை உருவானது.

இதையடுத்து பொறியியல் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 2-ம் தேதி தொடங்கும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதன் இயக்குநர் விவேகானந்தன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 2-ல் தொடங்கி 31-ம் தேதி முடிவடையும். ரேண்டம் எண் ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகள் ஜூன் 6-ல் தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும். தரவரிசை பட்டியல் ஜூன் 17-ல் வெளி யாகும்.

தொடர்ந்து விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரரின் பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 20, 21, 22-ம் தேதிகளில் நடைபெறும்.

தொடர்ந்து தொழிற்பிரிவு கலந்தாய்வு ஜூன் 25 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். அதன்பின்னர் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ல் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறும். இறுதியாக துணை கலந்தாய்வு ஜூலை 29, 30-ம் தேதிகளில் நடத்தப்படும்.

கலந்தாய்வு முழுவதும் இணையதளம் வழியாகவே நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி உள்ளிட்ட இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x